(செ.தேன்மொழி)

றுகுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும்   அங்கு சேவையில் ஈடுப்பட்டிருந்த கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.  பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை மாணவர்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

றுகுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை மறித்து நின்றுள்ளனர். பின்னர் மாணவர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதுடன் இதன்போது சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கல்வி சாரா ஊழியர்கள் சிலரும் உள்ளடங்குவதினால் ஏனைய ஊழியர்கள் மாணவர்களுக்கு எதிர்ப்பை தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பில் ஈடுப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரும் இதன்போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சேவையில் ஈடுப்பட்டிருந்த ஏனை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களையும் மாணவர்கள் தாக்க முற்பட்டதினால் இவர்கள் கடமையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸார் இணைக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாத்தறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை றுகுனு பல்கலைகழகத்தின் மாத்தறை - வெல்லமடம வளாகங்கள் இன்று மாலை 4 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.