பாடகர் சித் ஸ்ரீராம், ‘வானம் கொட்டட்டும் ’என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார்.

சென்னையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் சித் ஸ்ரீராம் .சிறிய வயதிலேயே இசை பயிற்சி பெற்ற சித் ஸ்ரீராம், 2013 ஆம் ஆண்டில் ஏஆர் ரகுமான் இசையில் மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 

அதன் பிறகு தமிழில் முன்னணி இசை அமைப்பாளர்கள் ஏ ஆர் ரகுமான், அனிருத், சந்தோஷ் நாராயணன், டி.இமான், யுவன் ஷங்கர் ராஜா ,சாம் சி எஸ், ஹிப் ஹாப் தமிழா, ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான இசையமைப்பாளருடன் பணியாற்றி, தமிழில் மட்டும் 40க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

இவர் தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரைப்படப் பாடல்களைப் பாடியிருக்கிறார். இதுவரை 60க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியிருக்கும் சித் ஸ்ரீராம் , மணி ரத்னம் தயாரிப்பில் அவரது உதவியாளர் தனா இயக்கத்தில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இவரது குரலில், கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான என் ஜி கே படத்தில் ‘அன்பே பேரன்பே...’ என்ற மெலோடி பாடல் ஹிட்டானது.

திரைப்படப் பின்னணிப் பாடகராக அறிமுகமாகி நூறு பாடல்களை கடப்பதற்குள், தமிழ் திரையிசை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி சாதனை புரிந்திருக்கிறார் சித் ஸ்ரீராம்.