(எம்.எம்.சில்வெஸ்டர்)

உலகக் கிண்ணப் போட்டிக்கு செல்லும்போது நாம் ஆப்கானிஸ்தான் அணியுடன்கூட வெற்றி பெற மாட்டோம் என சிலர குறைந்த மதிப்பிட்டிருந்தனர். எனினும், உலகக் கிண்ணத்தில் நாம் சிறப்பாக செயற்பட்டு ஆறாம் இடத்தைப் பெற்றமை எமக்கு திருப்தி அளிக்கிறது என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ண தெரிவித்தார்.

உலக்க கிண்ணப் போட்டியில் பங்குபற்றி லீக் சுற்றுடன் வெளியேறிய இலங்கை அணி இன்று நாடு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் ஊடக சந்திப்பு நடைபெற்றது. இந்த  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

எமது அணியின் சிரேஷ்ட வீரர்கள் எனக்கு முழ ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். உலகக் கிண்ணப் போட்டியில் எமது திட்டத்துக்கு ஏற்ப சரியாக விளையாடினோம். துடுப்பாட்டம், பந்துவீச்சு மிகச் சிறப்பாக செயற்பட்டோம் என கூறவரவில்லை. மேலும், உலகக் கிண்ணத்தில் சிறப்பான போட்டித்தன்மையை ஏற்படுத்தினோம் என நம்புகின்றேன். உலகக் கிண்ணத் தொடருக்கு செல்லும்போது நாம் ஆப்கானிஸ்தான் அணியுடன் கூட வெற்றி பெறமாட்டோம் என சிலர் கூறியிருந்தனர். எனினும், நாம் பலமிக்க இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளை வெற்றிகொண்டோம் அணிகள் நிலையில் 6ஆவது இடத்தைப் பெற்றோம்.

ஏஞ்சலோ  மெத்தயூஸ், லசித் மாலிங்க ஆகிய சிரேஷ்ட வீரர்கள் எனக்கு சிறந்த பங்களிப்பை அளித்தனர். அவர்களின் அனுபவம் எனக்கும் அணிக்கும் பேருதிவியாக இருந்தது. ஏனெனில், உலகக் கிண்ணத் தொடருக்கு 2 மாதங்கள் இருக்கும்போதுதான ஒரு நாள் அணிக்கான தலைமைத்துவம் எனக்குத் தரப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாத எனக்கு சிரேஷ்ட வீரர்களான மாலிங்கவும் மெத்தியூஸும் தங்களது அனுபவத்துடனான ஆலோசனைகளை எனக்கு வழங்கியமை பக்கபலமாக அமைந்து என்றார்.

இலங்கை கிரிக்கெட் அணி முகாமையாளரும் சுற்றுப்பயண தேர்வாளருமான அசந்த டி மெல் குறிப்பிடுகையில்,

போட்டி என்று வந்துவிட்டால் எதிரணியினரை ஆட்டங் காணச்செய்ய வேண்டும். ஒரு சில போட்டிகளில் நாம் ஆக்ரோஷ ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறிவிட்டோம். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் 115 ஓட்டங்களைப் பகிர்ந்து எதிரணியை ஆட்டங்காணச் செய்திருந்தனர். வெற்றி எமது பக்கமாக இருந்தபோதிலும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் அழுத்தத்தைத் தங்கள்மேல் திணித்துக்கொண்டதால் பாதகமாக அமைந்தது.

பயிற்சிப் போட்டியொன்றில் அவிஷ்க உபாதைக்குள்ளானதால், ஆரம்பப் போட்டிகளில் அவர் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. அவிஷ்கவை ஆரம்ப வீரராகவே குழாத்தில் இணைத்திருந்தோம். அவர் உபாதைக்குள்ளானதால் குசல் பெரேராவவை ஆரம்ப வீரராக களமிறக்க நேரிட்டது. எமது மத்திய வரிசை வீரர்கள் சற்று மந்தமாக விளையாடியதுடன், விக்கெட்டுக்களையும் தாரை வார்த்தனர். இந்நிலையில் உபாதையிலிருந்து பூரணமாக குணமடைந்த அவிஷ்கவை 3ஆம் இலக்க வீரராக விளையாடச்செய்தோம். அவர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி அணிக்கு பெரும் பங்காற்றியிருந்தார்.

கார்டிப் ஆடுகளமானது முழுவதும் புற்களில் நிறைந்திருந்தது. அவ்வாறான ஆடுகளங்கில் துடுப்பெடுத்தாடுவது கடினமாகும். ஆடுகளத்துக்கும், மைதானத்துக்கும் பெரியளவு வித்தியாசம் இருக்கவில்லை. ஆடுகளத்தில் உள்ள புற்கள் சுமார் 9 மில்லி மீற்றர் உயரம் காணப்பட்டிருந்தது. அவற்றை நான் படமெடுத்து ஐ.சி.சி.க்கு முறையிட்டேன். அதன் பிற்பாடு இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்ற போட்டியின்போது ஆடுகளத்தில் புற்கள் இருக்கவில்லை. அங்கு புற்கள் வெட்டப்பட்டு தட்டையாக இருந்தது. இதன் பின்னர் இங்கிலாந்து அந்த ஆடுகளத்தில் 386 ஓட்டங்களை குவித்ததுடன் பங்களாதேஷும் 280 ஓட்டங்களை பெற்றது.

கார்டிவ் மைதானத்தில் மொத்தமாக 4 போட்டிகள் விளையாடப்பட்டது. முதல் இரண்டு போட்டிளில் இலங்கை  நியூஸிலாந்தையும், ஆப்கானிஸ்தானையும் எதிர்கொண்டன. மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் இங்கிலாந்துடன் விளையாடியிருந்ததுடன், நான்காவது போட்டியில் தென் ஆபிரிக்கா ஆப்கானிஸ்தானுடன் விளையாடியிருந்தது. இந்த நான்கு போட்டிகளிலும்  மூன்று ஆசிய நாடுகளை பங்கேற்றுள்ளது. அதிலும் இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் போட்டியைத் தவிர ஏனைய  3 போட்டிகளுமே துடுப்பாட்ட வீரர்களுக்கு சற்று கடினமான ஆடுகளங்களாகவே அமைந்தன என்றார்.