தளபதி விஜய் நடித்த படங்களிலேயே ‘பிகில்’ படத்தின் பட்ஜட் தான் மிக மிக அதிகம் என்று திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். 

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் பிகில். உதைப்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி உருவாகயிருக்கும் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் யோகி பாபு, கதிர், இந்துஜா, ஜேக்கி ஷெராப், விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் பட்ஜட், இந்திய மதிப்பில் 140 கோடி என்று தயாரிப்பு நிர்வாகிகளை மேற்கோள் காட்டி திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். இது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தின் பட்ஜட்டை விட அதிகம் என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள்.

தளபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, பிகில் படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக்குகளை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்த இப்படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, ட்வீட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இன்று மாலை 6 மணி அளவில் தளபதி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது ’ என்று தெரிவித்திருக்கிறார். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலாக காத்து இருக்கிறார்கள்.

இதனிடையே பிகில் படத்தின் வணிகம், படவெளியீட்டிற்கு முன்னரே வெளிநாட்டு உரிமை, தமிழக திரையீட்டு உரிமை, தொலைகாட்சி மற்றும் இணைய தள உரிமை என 200 கோடியைக் கடந்துவிட்டதாகவும் திரைப்பட வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.