- எஸ்.தவபாலன்

”சிறுபான்மையினர் அனைவருமே ஒன்று சேர்ந்தால் அரசுக்கு எப்படியிருக்கும் என்ற சிந்தனையூற்று அதே சிறுபான்மையினரிடத்தில் தோன்ற வேண்டும். காலம் பதில் சொல்லட்டும்” என்று விட்டுவிடுவோம்.

“நம் நாட்டு அரசு உண்ணாவிரதம் இருந்த சிறுபான்மையினரை ஒருபோதும் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை இதனை பழைய வரலாறுகள் செப்புகின்றன“.

உண்ணாவிரதப்போராட்டங்களும் சத்தியாக்கிரகப் போராட்டங்களும் காந்தி வழிவந்தவையாக இருந்தாலும் நம் நாட்டில் அவை கொச்சைப் படுத்தபட்ட வரலாறே இருக்கின்றன”

உண்ணாவிரதமிருந்த போராளி “திலீபன் 1987 ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 இல் மரணத்தை தழுவிக் கொண்டார். இது இந்த நாட்டின் சரித்திரத்தில் அது ஒரு கறைபடிந்த அத்தியாயம், மக்களின் மனதினிலிருந்து நீக்க முடியாதபடி பதிவேற்றமாகிவிட்டது”.

”இறுதியாக அன்னை பூபதி 1988 ஆண்டு மாச் மாம் 19 ஆம் திகதி மரணத்தை தழுவிக் கொண்டாா். இது அரசு விட்ட அடுத்த பிழை”.

”1950 களில் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக இருக்கலாம் என்று அரசியலமைப்பில் பண்டாரநாயக்கா சேர்த்திருந்தார். அவைகளை நீக்கும்படி சட்டத்தரணி கே.எம்.பி ராஜரத்னா, பேராசிரியர் ஜே.ஈ.ஜெயசூரிய ஆகிய சிங்களத் தீவிரவாதிகள் அச்சரத்துக்களை நீக்கும்படி உண்ணாவிரதம் இருந்தார்கள் அதனால் அவை நீக்கப்பட்டன”

”பண்டா செல்வா ஒப்பந்தம்” கிழித்தெறியப்பட வேண்டுமென மகா சங்கத்தினர் பண்டார நாயக்காவின் வாசஸ்தலத்திற்கு சென்று புல்தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். அதற்கு ”டட்லியும்” ”ஜே. ஆரும்”  பக்கபலமாகவிருந்தனர். அதனால் ”பண்டாசெல்வா ஒப்பந்தம்” கிழித்தெறியப்பட்டது”

உண்ணாவிரதம், கோரிக்கையை வென்றெடுப்பதற்கான அகிம்சா வழி ஆயுதமாக பாவிக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தான் வெள்ளையர்களுக்கெதிராக கத்தியின்றி, யுத்தமின்றி இரத்தமின்றி போராடியவர் அவர் பாவித்த ஆயுதங்கள் ”அகிம்சை” அதனோடு இணைந்த ”மன உறுதி”. இதனால் தான் அவர் வெள்ளையர்களை வென்றார். நம் நாட்டில் உண்ணாவிரதங்கள் கோரிக்கை நிறைவேறாததால் மரணத்தில் நிறைவடைந்துள்ளன. இன்னும் சில இந்த நாட்டில் பல அரசியலில் பாரிய மாற்றத்தை தோற்றுவித்துள்ளன. அதனை மாற்றங்கள் என்பதா வடுக்கள் என்பதா?

இப்போதெல்லாம் வீட்டில் சாப்பிட்டு, உறங்கிவிட்டு உண்ணாவிரத மேடையில் அமர்ந்து படம் எடுத்து ஊடகங்களில் அதைப்போடுவோர் அதிகம். நமது நாட்டில் நடந்து வருகின்ற உண்ணாவிரத நிகழ்வுகள், அடையாள உண்ணாவிரதம், சுழற்சிமுறை உண்ணாவிரதம் சாகும்வரை உண்ணாவிரதம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. கோரிக்கைகளை முன்வைத்து அவைகளை வென்றெடுப்பதற்கான உத்தியாகப் பாவிக்கப்படுபவைகளாகும். புராண இதிகாச காலங்களில் உண்ணாவிரதம் இருந்ததாக கருதப்படுகிறது. அவைகளும் கோரிக்கைகளை முன்வைத்ததாகவே காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு அசோக வனத்தில் விடப்பட்ட சீதை இராமனிடமிருந்து ஒரு ”சைகை” கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன. 

நமது நாட்டைப் பொறுத்தவரை உண்ணாவிரதங்கள் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தியுள்ளன. திருப்பு முனைகள் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே அவைகள் கைக் கொள்ளப்பட்டதாக பேசப்படுகிறது.

நமது நாட்டில், 1950 களில் பண்டராநாயக்கா பிரதமராகவிருந்தார் அவர் சிங்களம் மட்டும்தான் ஆட்சி மொழி என்பதை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றினார். அதில் சில சரத்துக்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக இருக்கலாம் என்று சேர்த்திருந்தார் அவைகளை நீக்கும்படி சட்டத்தரணி கே.எம்.பி ராஜரத்னா, பேராசிரியர் ஜே.ஈ.ஜெயசூரிய ஆகிய சிங்களத் தீவிரவாதிகள் அச்சரத்துக்களை நீக்கும்படி உண்ணாவிரதம் இருந்தார்கள் அதனால் அவை நீக்கப்பட்டன

அதன் பிற்பாடு பண்டாரநாயக்கா பிராந்திய சபைகளை நிறுவுவதற்காக ”பண்டா செல்வா ஒப்பந்தத்தை” ஏற்படுத்தினார் அது கிழித்தெறியப்படவேண்டுமென மகா சங்கத்தினர் பண்டார நாயக்காவின் வாசஸ்தலத்திற்கு சென்று புல்தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். அதற்கு ”டட்லியும்” ”ஜே.ஆரும்” பக்கபலமாகவிருந்தனர். அதனால் ”பண்டா செல்வா ஒப்பந்தம்” கிழித்தெறியப்பட்டது

உண்ணாவிரதப்போராட்டங்களும் சத்தியாக் கிரகப் போராட்டங்களும் காந்தி வழிவந்தவையாக இருந்தாலும் நம் நாட்டில் அவை கொச்சைப் படுத்தபட்ட வரலாறே இருக்கின்றன

1950 களில் அரசு சிங்கள எழுத்தான ”ஸ்ரீ” யை வாகனங்களின் இலக்கத் தகடுகளில் பொறிக்கும் நடைமுறையைக் கொணர்ந்தது அதனையும் தனிச் சிங்களச் சட்டத்தையும் எதிர்த்து அமிர்தலிங்கம் இராசமாணிக்கம், வன்னியசிங்கம் போன்றோா் காலிமுகத்திடலில் சத்தியாக் கிரகம் இருந்தார்கள். அரசு அவர்களின் மேல் குண்டர்களை ஏவிவிட்டு அதனை கலைத்தது. இது இந்த நாட்டின் வரலாற்றில் சத்தியாக்கிகத்திற்கு ஏற்பட்ட அவமானம் எனலாம்

புலிகளின் இளைஞா் அணியைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய இளைஞன் அமிர்தலிங்கம் - திலீபன் நல்லுார்க் கோயில் முன்றலில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வத்து 1987 செப்டெம்பர் மாதம் 16 இல் உண்ணாவிரதத்தை தொடங்கி இருந்தார். அப்போது ”இந்திய அமைதி காக்கும்படை” நாட்டில் இருந்தது. அவர் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும், சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் களையப்பட வேண்டும், வடக்குக் கிழக்கில் திறக்கப்பட்ட பொலீஸ் நிலையங்கள், காவலரண்கள், இராணுவ முகாம்கள் என்பன நீக்கப்பட வேண்டும் என்பனவாகும்.

அவரது கோரிக்கைள் எதவுமே அரசால் கவனிக்கப்படவில்லை. இறுதியாக அவர் செப்டெம்பர் மாதம்  26 இல் மரணத்தை தழுவிக் கொண்டார். இது இந்த நாட்டின் சரித்திரத்தில் ஒரு கறைபடிந்த அத்தியாயம், மக்களின் மனதினிலிருந்து நீக்கமுடியாதபடி பதிவேற்றமாகிவிட்டது.

இதன்பிற்பாடு மட்டக்களப்பில் அன்னையா் முன்னணித் தலைவி ”அன்னை பூபதி” மூன்று அம்சக் கோரிக்கைளை முன்னிறுத்தி 1988 இல் மார்ச் 19 இல் உண்ணாவிரத்தை ஆரம்பித்தார். அப்போது புலிகள் திராணியோடு இருந்தார்கள். அவருடைய கோரிக்கைள் சாதாரணமானவை. புலிகளோடு அரசு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும், யுத்த நிறுத்தம் செய்யப்பட வேண்டும். தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பனவாகும் அன்னைபூபதியின் கோரிக்கைகள் அரசால் கவனிக்கப்படவில்லை. இறுதியாக மாச் 19 ஆம் திகதி மரணத்தை தழுவிக் கொண்டாா் இது அரசு விட்ட அடுத்த பிழை.

இது தவிர இந்த நாட்டில் ஐக்கிய நாடுகள் சபை இறுதிப் போரில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு விசாரணைச் சபையை நிறுவியது. அதனை நீக்க வேண்டுமென இலங்கையிலுள்ள ஐ.நா.சபைக் காரியாலயத்திறகு முன்னால் ஒரு ”சாகும்வரை” உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணியின் விமல் வீரவன்ஸ ஆரம்பித்தார். அதற்கு ஐ.நா.செவிசாய்த்தது. இதற்குப்பின்னாலும் பிரதி அமைச்சர் பதவியிலிருந்த தேவரப்பெரும பாடசாலைகளில் சில மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படாமைக்கு எதிர்புத் தெரிவித்து பாடசாலை வளாகத்தின் “சீலிங்காற்றாடியில்” தொங்கினார். அவரது கோரிக்கை நிறைவேறி பிள்ளைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனா். அவர் அதில் வெற்றியை அடைந்தார். ஆளும் அரசு உண்ணாவிரதம் இருப்பதற்கு இடம் வைக்காமல் செவ்வனே அரசியலை கொண்டு செல்வதே புத்திசாலித் தனமானது.

நமது நாட்டில் அண்மையில் நடந்த சம்பவமொன்று. வண.அத்துரலிய ரத்ன தேரர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது பதவி அதிகாரத்தினால் பாராளுமன்றத்தில் ஒர் குற்றப் பிரேரணையை முன்மொழிந்துவிட்டு அதே விடயம் தொடர்பாக பாராளுமனறத்திற்கு வெளியே உண்ணாவிரதம் இருப்பது நியாயமாகாது. அவரது கோரிக்கை அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்பதாகும் அவர் பயங்கரவாத நிகழ்வுகளோடு தொடர்பு பட்டிருக்கிறார் என்பதாகும். அதனால் பாராளுமன்றத்திலுள்ள முஸ்லீம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அத்தனைபேரும் தமது பதவிகளைவிட்டு விலகி விசாரணைக்கு வழிவிட்டார்கள். வண. அத்தரலிய தேரரின் அர்த்தமற்ற செயற்பாடு நாட்டில் பல பிரச்சனைகளை தோற்றுவிதுள்ளது. மகா சங்கத்தினர் பதவி துறந்த முஸ்லிம்கள் அனைவரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பதவியை ஏற்குமாறு கோரினா். நாங்கள் எல்லோாரும் குற்றமற்றவர்கள். ”ஐஎஸ்” பயங்கரவாதத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்பதை அரசு வெளிக் கொணர வேண்டும். அப்போதுதான் நாம் பதவியை ஏற்கமுடியும் என்று கூறினர். மகா சங்கத்தினரால் அக்கருத்தை மறுக்க முடியவில்லை. உலக முஸ்லிம் நாடுகளின் அமைப்பு இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசின் கவனத்தை கோரியுள்ளது.

வண. அத்துரலிய தேரரின் நடவடிக்கை எதிரும் புதிருமான முஸ்லீம் அரசியல்வாதிகளை ஒன்று சேரவைத்துள்ளது. தேரர் சிக்ஸர் அடிக்க வெளிக்கிட்டு அடித்தது வெறும் நாலு ஓட்டங்கள் தான். முஸ்லீம் அரசியல்வாதிகள் சிக்ஸர் அடித்துவிட்டாா்கள்.

முஸ்லீம் அரசியல் வாதிகள் தாங்கள் தான் ஒன்று சேர்ந்து ஒரே தடவையில் தமது பதவிகளை ராஜினாமாச் செய்து சாதனை படைத்துள்ளோம் என்று நினைத்துவிடலாகாது. அவர்களுக்கு முன்னா் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இதனை 1983 இல் செய்து காட்டியுள்ளனர். நாட்டுப் பிரிவினை கோரமாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர்கள சத்தியப்பிரமாணம்செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ”அது எம்மால் முடியாது” என அவர்கள் அனைவருமே பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். ஆகையால் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு முன்னரே “சிக்ஸர்” அடித்தவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் மேற் கூறியவைகளிலிருந்து அரசு சிறுபான்மையினரை ஒருபோதும் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை என்பதை கண்டு கொள்ள முடியும் இந்த இடத்தில் சிறுபான்மையினர் அனைவருமே ஒன்று சேர்ந்தால் அரசுக்கு எப்படியிருக்கும் என்ற சிந்தனையூற்று அதே சிறுபான்மையினரிடம் தோன்ற வேண்டும். காலம் பதில் சொல்லட்டும்.

இது இப்படி இருக்கும்போது, கல்முனையில் ஒரு உண்ணாவிரதம் இடம்பெற்றது. அதன் இலக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென்பதாகும். அதில் இந்து, கிறிஸ்தவம், பௌத்த மத குருமார்களோடு மாநகர சபை உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர் உண்ணாவிரதிகள் மொத்தம் ஐவர். ஆறுநாட்கள் அது நீடித்தது. அரசு அதனை நிறுத்த வாக்குறுதிகளை அளித்து பிரயத்தனம் செய்தது. உண்ணாவிரதிகள் அர்த்தமற்ற வாக்குறுதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாதென முஸ்லீம்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தை கைக் கொண்டனர். இதில் பாராளுமன்ற உறுப்பினா்கள ஹரீஸ்,பைசல் காசிம் ஆகியோரும், தேசிய முஸ்லீம் மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அக்கரைப்பற்று அத்தாவுல்லாவும் பங்குபற்றியிருந்தனா். பிரதேச செயலகத்தின் தரத்தை உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுமாறும், அதே கோரிக்கையை நிறைவேற்ற வேண்டாம் என்ற இலக்குகளோடு அவை இரண்டும் இருந்தன. அவை ஒன்றுக்கொன்று எதிரானவைகள்.

இந்த நிலையில் வடக்கு பிரதேச உயர்வுக்காக இடம்பெறும் உண்ணாவிரதத்தின் இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலிய தேரரும் விஜயம் செய்திருந்தார். ஆயினும் அவரால் எந்த வாக்குறுதியும் வழங்கப்படவில்லை. அதன் பிற்பாடு சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் தயாகமகே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்கள் சுமந்திரன் கோடீ்ஸ்வரன், ஆகியோரும் சமூகம் கொடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் இரண்டு மாதத்திற்குள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகவும் வாக்குறுதியளித்த போதும். அதற்கு அரசினால் வழங்கப்பட்ட கடிதத்தையும் காட்டினர். உண்ணாவிரதிகள் அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த 30 வருட காலத்திலும் இதுதான் நடந்தது என்றனர். அதனால், அவர்கள் திரும்பிவிட்டனா். இந்த விடயத்தில் தமிழத் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர் ”சம்பந்தரோ” ”மாவையோ” அல்லது பொதுச் செயலர் ”துரை ராஜசிங்கமோ” எட்டிப்பார்க்காதமை ஒரு குறைபாடாக மக்களால் பேசப்படுகிறது.

உண்ணாவிரதத்தின் ஆறாவது நாள் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்  வண. ஞானசார தேரர் வந்து நீராகாரம் கொடுத்து உண்ணாவிரத்த்தை நிறைவாக்கினார். அவர் வழங்கிய வாக்குறுதி. பிரதேச செயலகம் இரண்டு மாதத்திற்குள்  முழுமையான அந்தஸ்த்தைக் கொண்ட பிரதேச செயலகமாக மாறிவிடும் என்பதாகும். இதோடு இது நிற்கிறது.

ஆகையால் உண்ணாவிரதங்கள் நமது நாடடில் முற்று முழுதாக தோற்றதெனவோ அல்லது வெற்றியீட்டிய தென்றோ என ஒரு மதிப்பீட்டை கூற முடியாது. சிறுபான்மையினங்கள் ஒன்றையொன்றை எதிா்ப்பது ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பாகிவிடும். ஒற்றுமைப்பட்டே காரியங்களை சாதிக்க வேண்டும். சம நீதி வேண்டும். கல்முனையில் இரு தரப்பாரும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை. இந்த முப்பது வருட காலமும் அதைத்தான் செய்தோம் என்கிறார்கள் அப்பகுதி தமிழர்கள். இதிலும் உண்மையிருக்கிறது. தமிழர்களிடம் இருக்கும் விட்டுக் கொடுப்பு. முஸ்லீம் தரப்பில் இல்லாதிருக்கிறது. பல வற்றை முஸ்லீம் தலைவர்கள் தமிழ்பகுதியிலிருந்து பிரித்தெடுத்தார்கள் அப்போதெல்லாம் எந்த முஸ்லிம் தலைமைகளும் தமிழ்தரப்போடு பேசவில்லை. நிலத் தொடர்பற்ற முஸ்லிம்களுக்கான கல்வி வலயங்கள், அக்கரைப்பற்று மாநகரசபைக்கு இரண்டு தமிழ் வட்டாரங்களை சேர்த்தமை, முஸ்லீம் பரதேசத்திற்கென வாழைச்சேனை மத்தி பரதேச செயலகத்தை உரவாக்கியமை. மஞ்சன் தொடுவாய் கிராமத்தில் பொலீஸ் நிலையத்தை உருவாக்கி அதற்கு காத்தான்குடி என்று பெயரிட்டமை, தமிழர்களின் சவக்காலையை துப்பரவு செய்து அங்கு பிரதேச செயலகத்தை உருவாக்கியமை என்று ஏகப்பட்ட உதாரணங்களை கூறலாம். தமிழர்களும் அவைகளை எதிர்க்கவில்லை. இன்னொரு தடவையாவது, அல்லது பல தடவைகளாவது சமாதானத்திற்கு முயற்சிப்பது தவறாகாது. விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போனதாக சரித்திரம் இல்லை. சமாதானமும் நல்ல தீர்வும்தான் இப்போதைய தேவை.