ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான கலாசார அமைப்பானது (யுனெஸ்கோ) அஸெர்பைஜானின் பகு நகரில் இடம்பெற்று வரும் கூட்டத்தில்  உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில்  பாதுகாக்கப்பட வேண்டிய புதிய தளங்களைச் சேர்க்கும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

43ஆவது வருடமாக இடம்பெறும் இந்தக் கூட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை நிறைவு பெறவுள்ள நிலையில் இதுவரை அந்த பாரம்பரிய தளங்கள் பட்டியலில் புதிதாக ஐஸ்லாந்தின் வட்னாஜோகல் தேசிய பூங்கா,  இந்திய ஜெய்ப்பூர் நகர், ஜப்பானிய மண் மேட்டு கல்லறைகள், ஈராக்கிய பபிலோன்  நகர், மியன்மாரின் பௌத்த வழிபாட்டிடங்கள் நிறைந்த பாகன் பிராந்தியம், லாவோஸின் ஜார்ஸ் சமவெளி என்பன இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 

ஐஸ்லாந்தின் வட்னாஜோகல் தேசிய பூங்கா அந்நாட்டின் மொத்த  நிலப்பரப்பில் 14 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது. அது அரிய பறவைகள் மற்றும் கிங் பென்குயின்கள் உள்ளடங்கலான  கடல்வாழ் முலையூட்டிகளின் புகலிடமாக விளங்குகிறது.

இந்திய வடமேற்கு ராஜஸ்தானிலுள்ள கோட்டை நகரான ஜெய்பூர் பழைமையான அலங்காரக் கட்டிடங்கள் பலவற்றை உள்ளடக்கியுள்ளது. ஜப் பானிய ஒஸாகா பிராந்தியத்திலுள்ள பண்டைய கல்லறைகள் 3ஆம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவையாகும்.