(செ.தேன்மொழி)

ஐ.ஒ.சி நிறுவனத்தின் தரத்தில் குறைந்த பெற்றோல் மற்றும் டீசலை பெற்றோலிய கூட்டுத்தபனத்தின் விநியோக விலையையும் விட அதிக விலையில் விநியோகிப்பதற்கு மட்டுமன்றி நாடுபூராகவும் தரத்தில் குறைந்த பெற்றோலை விநியோகிக்க ஏன் அனுமதி கொடுக்கின்றீர்கள் என நுகர்வோர் அதிகார சபைக்கு பொறுப்பான அமைச்சர் புத்திக பதிரனவிடம் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள  நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் அதில் கூறியுள்ளதாவது,

இலங்கை பூராகவும் ஐ.ஒ.சி நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டு வரும் ஒக்டேன் 92 பெற்றோல்  தரத்தில் குறைந்தது என தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நாம் நுகர்வோர் அதிகார சபையில் முறைப்பாடொன்றையும் செய்திருந்தோம். அதற்கமைய அதிகாரசபை இந்த பெற்றோல் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொறுப்பை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒப்டைத்துள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது ஒக்டேன் 92 பெற்றோலில்; ஒக்டேன் 90 பெற்றோலின் மூலக்கூறுகள் அடங்குவதாக  எமக்கு தெரிய வந்துள்ளது. அதேவேளை ஐ.ஒ.சி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட மாதிரிகளே இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் , இந்த எண்ணெய் மாதிரிகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோக மத்திய நிலையத்திலிருந்தே விநியோகிக்கப்பட்டுள்ளன. 

ஐ.ஒ.சி நிறுவனத்தின் களஞ்சியசாலை திருகோணமலையில் அமைந்திருப்பதனால் கொழும்புக்குள் எண்ணெய் விநியோகத்தை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்தே அது மேற்கொள்கின்றது. அதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் திருகோணமலையில் ஐ.ஒ.சியுடன் இணைந்தே விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

தரத்தில் குறைந்தது என்பதினால் ஒக்டேன் 90 பெற்றோலை தடைசெய்து ஒக்டேன் 92 பெற்றோலை விநியோகிக்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும். இந்த தரத்தில் குறைந்த ஒக்டேன் 90 பெற்றோலே ஒக்டேன் 92 ஆக விநியோகிக்கப்படுகின்றது.

இவ்வாறு நிறுவனங்களினால் நுகர்வோருக்கு தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்படும் போது , ஆட்சியாளர்கள் மரணதண்டனை குறித்தும் ,ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விநியோகிக்கப்படும் பெற்றோல் மற்றும் டீசலின் விலையையும் விட அதிகமான விலையில் ஐ.ஓ.சி நிறுவனம் விநியோகப்பதிற்கு ஏன் அனுமதியளிக்கிறீர்கள் என்றும் நாடுபூராகவும் தரத்தில் குறைந்த பெற்றோலை தொடர்ந்தும் விநியோகிக்க ஏன் இடமளிக்கின்றீர்கள் எனவும் நுகர்வோர் அதிகார சபைக்கு பொறுப்பாக செயற்படும் அமைச்சர் புத்திக பத்திரனவிடம் நாம் கேட்கின்றோம்.