காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை 10 ஆண்டுகளைத் தாண்டியும், எந்த முடிவும் இன்றித் தொடருவதைப் போலவே, இதனை வைத்து அரசியல் நடத்துகின்ற போக்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் முதலில் தொடங்கப்பட்டது வடக்கில் அல்ல. தெற்கில் தான்.
1971 ஜே.வி.பி கிளர்ச்சியின் போதும், 1987- 1990 வரையான இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்துக்கும் அதிகம்.
அப்போது இரண்டு தரப்புகளும் தமக்கு எதிரிகள் எனக் கண்டவர்களையும், சந்தேகம் கொண்டவர்களையும், காணாமல் ஆக்குவதும், வீதிகளில் ரயர்கள் போட்டு எரிப்பதும், மின்கம்பங்களில் கட்டி கொல்வதும் வழக்கம்.
பிரதி பொலிஸ்மா அதிபராக இருந்த பிரேமதாச உடுகம்பொல, சந்தேக நபர்களை விசாரிக்கும் போது, காதுக்குள் ரெனோல்ட் பேனாவை அறைந்து கொலை செய்ததாக கூட குற்றச்சாட்டுகள் உள்ளன.

கொடூரமாக கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஜே.வி.பி.யினரும், சந்தேக நபர்களும், அப்பாவி பொதுமக்களும் இன்னமும் காணாமல்போனோர் பட்டியலிலேயே இருக்கின்றனர்.
அன்னையர் முன்னணி என்ற பெயரில், காணாமல்போன தமது பிள்ளைகளுக்காக முன்னர் தென்பகுதி தாய்மார் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த அமைப்புக்கு மஹிந்த ராஜபக் ஷ, மங்கள சமரவீர போன்ற பல அரசியல்வாதிகளின் ஆதரவும் அப்போது இருந்தது.
பின்னர் காலப்போக்கில் அன்னையர் முன்னணி காணாமல்போனது.
முதலில் சுதந்திரக் கட்சி ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி மறந்து போனது, பின்னர், ஐ.தே.க ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையும் காணாமலேபோனது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராட்டங்களை நடத்தியவர்கள் காலப்போக்கில் வலுவிழந்து போக, அந்தப் போராட்டங்கள் நீர்த்துப் போயின.
இன்றைய நிலையில் ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போது தெற்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய எந்த கரிசனையும் இல்லாத நிலையே காணப்படுகிறது. ஜே.வி.பியும் இதுபற்றிக் கரிசனை கொண்டதில்லை.
அதற்குப் பின்னர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை பூதாகாரமாகியது யாழ்ப்பாணத்தில் தான்.
1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாடு படையினரின் கையில் வந்த பின்னர், சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், பெருமளவிலான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், செம்மணியில் புதைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
அவ்வாறு புதைக்கப்பட்டவர்கள் சிலரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட போதும் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சுமார் 600 பேரின் கதி இன்னமும் தெரியாது.
இராணுவ நெருக்கடிகளுக்கும் மத்தியில், தமது பிள்ளைகளைத் தேடித் திரிந்த பெற்றோர்களைக் கொண்டு, காணாமல்போனோரின் பெற்றோர் பாதுகாவலர் அமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டது.
அவ்வாறான ஒரு அமைப்பை தொடங்குமாறு தானே ஆலோசனை கூறியதாகவும், அந்த அமைப்பை உருவாக்கியதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.
இந்த அமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்திய போதும், எந்த பயனும் கிட்டவில்லை. காலப்போக்கில் அந்த அமைப்பு பெரும்பாலும் செயலற்றுப் போனது.
2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், படையினரிடம் சரணடைந்து அல்லது கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், போர்க்காலத்தில் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் இணைந்தும், புதிய அமைப்புகளை உருவாக்கினர்.
மாவட்டங்கள் தோறும் இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு போராட்டங்கள், வடக்கு, கிழக்கிலும், கொழும்பிலும் நடத்தப்பட்டன. பல நாடுகளின் இராஜதந்திர தூதரகங்களும், இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தன. பல உள்நாட்டு, வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புகளும் ஆதரவு கொடுத்தன. அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்தன.
ஜெனீவா வரைக்கும் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. ஜெனீவா கூட்டத்தொடர்களின் பக்க அமர்வுகளுக்கும் சென்ற, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் பலரும் தமது நிலையை விளக்கிக் கூறினர்.
ஆனால்,கடைசியில் எந்தப் பதிலும் அவர்களுக்கு இன்று வரை கிடைக்கவில்லை.
காணாமல் போனோருக்கான பணியகம் அமைக்கப்பட்டது.
அதன் மூலம் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று கூறப்பட்டது, அந்தப் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர் பல அமர்வுகள் நடத்தப்பட்டன. அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
ஆனாலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளையோ, தேடுதல்களையோ அந்த அமைப்பு ஆரம்பிக்கவில்லை.
அதைவிட, கடந்த பல மாதங்களாக இந்த அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது, என்பதே யாருக்கும் தெரியாத நிலை காணப்படுகிறது.
ஆனால், பல நூறு நாட்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படாமல், கவனிக்கப்படாமல் போய்க் கொண்டிருக்கிறது.
இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்ட பலர், கடந்த 10 ஆண்டுகளில் இறந்து போய் விட்டனர். இன்னும் பலர் நடமாட முடியாமல் இருக்கின்றனர். வேறு பலர் இந்தப் போராட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்று முடிவு செய்து விட்டு, இருக்கின்ற தமது பிள்ளைகளையோ, பேரப் பிள்ளைகளையோ வளர்த்து ஆளாக்குவோம் என்று முடிவு செய்து விட்டனர்.
இதனால், ஆயிரக்கணக்கானோரின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம், இப்போது வெறும், 10, 15 பேர் வந்தாலே பெரிய விடயம் என்ற நிலைக்கு சுருங்கிப் போய் விட்டது.
நீண்டகாலமாக இழுபறிப்பட்டு போனதால் சோர்ந்து போய், இந்தப் போராட்டங்களில் இருந்து பலரும் அந்நியப்பட்டுப் போனதாக கூற முடியாது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள். அரசியல் மயப்படுத்தப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டதாலும் கூட பலர் விரக்தியில் வெளியேறினர் என்பதே உண்மை.
யாழ்ப்பாணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணியின் போது, முற்றவெளியில் சம்பந்தன், சுமந்திரனின் உருவபொம்மைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்தனர்.
அது, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும், கூட்டமைப்பு தலைமைக்கும் இடையிலான விரிசல் அதெிகரித்திருந்த சூழலில் நிகழ்ந்த ஒன்று. அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், அனந்தியும் கூட்டமைப்பு தலைமையுடன் முரண்படத் தொடங்கினர்.
அதுபோன்றே, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சியின் 16 ஆவது மாநாடு நடந்து கொண்டிருந்த போது, மண்டபத்துக்கு வெளியே வவுனியாவில் இருந்து வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒரு போராட்டத்தை நடத்தினர். கூட்டமைப்பு தலைவர்களை வசைமாரி பொழிந்தனர். கோசம் போட்டனர்.
ஆனால் தமிழ் அரசு கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற ஒரு தலைவர் கூட அவர்களைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. ஏன் என்று கேட்கவுமில்லை. போராட்டம் நடத்திய தம்மை கண்டுகொள்ளாமல், தலைவர்கள் சென்ற போதும் அவர்கள் வசைமாரி பொழிந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கும் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதாக வாக்குறுதி கொடுத்து, பதவிக்கு வந்ததால் தான், கூட்டமைப்பினரிடம் தாம் கேள்வியை எழுப்புவதாக அவர்கள் கூறினர்.
தாங்களே வாக்களித்து தெரிவு செய்தவர்கள் என்பதால், கேள்வி கேட்பதற்கு உரிமை உள்ளது என்றும் கூறினர். ஆனால் இதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பு, 2015இல் தேர்தலை புறக்கணிப்பதாக, அறிக்கை வெளியிட்டது நினைவில் இருக்கலாம்.
தாங்கள் யாருக்கும் வாக்களிக்கமாட்டோம் என்று கூறியவர்களே இன்று தாம் வாக்களித்து தெரிவு செய்யப்பட்டவர்களிடம் நீதி கேட்பதாக கூறியது வேடிக்கை.
காணாமல் ஆக்ககப்பட்டவர்களைக் கண்டறியும் போராட்டம் எந்தளவுக்கு அரசியல் மயப்படுததப்பட்டுள்ளது என்பதற்கு, இந்தப் போராட்டமே உதாரணம்.
சம்பந்தன், சுமந்திரனின் உருவபொம்மைகளை எரிப்பது, கட்டியிழுத்து செருப்பு மாலை அணிவிப்பது, அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளுடன் போராட்டம் நடத்துவது தான்- இந்த அமைப்பினது வேலைத் திட்டமாக மாறியிருக்கிறது,
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கும் கூட்டமைப்புக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை. அதற்குப் பதிலளிக்கும் கடப்பாடும் அவர்களுக்கு இல்லை.
காணாமல் ஆக்கப்பட்ட போது, ஆட்சியில் இருந்த மஹிந்தவிடமோ கோத்தாபய ராஜபக் ஷவிடமோ நீதி கேட்டுப் போராடும் துணிச்சல் இப்போதும் கூட யாருக்கும் கிடையாது.
மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் எதிராக போராட்டம் நடத்தியவர்கள் யாருமே, வடக்கு வந்த மஹிந்தவுக்கு எதிராக ஒருபோதும் போராட்டங்களை நடத்தியதில்லை.
காணாமல் ஆக்கப்பட்டதற்கு பொறுப்பாக இருந்தவர்கள் மீது கோபமோ அவர்களிடம் கேள்வி எழுப்பும் துணிவோ இல்லாமல், அதனுடன் தொடர்புபடாதவர்களிடம் போய், காணாமல் போனவர்களை கண்டறிந்து தருமாறு, போராட்டங்களை நடத்துவது எந்த வகையில் நியாயமானது என்ற வாதமும் உள்ளது.
இங்கு பிரச்சினைக்குரிய விடயம் என்னவென்றால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தவறாக வழிநடத்தும் அரசியல் தரப்புகள் தான். பாதிக்கப்பட்ட அப்பாவித் தாய்மார்களை அவர்கள் தமது சுயலாப அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதனைப் புரிந்து கொள்ளாத அப்பாவித் தாய்மார்களின் கண்ணீரையும், கதறலையும், வாக்குகளாக மாற்றுவதற்கு பல்வேறு தரப்புகளும் முயன்று கொண்டிருக்கின்றன. கூட்டமைப்பும் அதற்கு விதிவிலக்காக இருந்ததில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை என்பது இலகுவில் தீர்க்கப்பட முடியாத ஒன்று. பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு, தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது நன்றாகவே தெரியும். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லாத நிலையிலேயே இருக்கிறார்கள்.
எய்தவன் இருக்க அம்பை நோவது போல, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தாம் நீதி கேட்க வேண்டிய இடத்தில் நீதியைக் கேட்காமல், தவறான இடத்தில் போய் நீதியைக் கேட்பது ஒருபோதும் பிரச்சினையை தீர்க்காது.
இது இந்தப் போராட்டத்தை மேலும் பலவீனப்படுத்தும். அந்நியப்படுத்தும். அதனைத் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் சூதாட்டத்தில் தாம் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளாமலேயே - வீதிகளின் அழுது புரண்டு கண்ணீரை சிந்துவதற்காக, அப்பாவி தாய்மார், அலைக்கழிக்கப்படுகிறார்கள். இது அவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதை விட, பரிதாபமான நிலை.