(இங்கிலாந்தின் லீட்ஸ் அரங்கலிருந்து நெவில் அன்தனி)

இலங்கையில் ஓர் உள்ளூர் போட்டியே நடத்தப்படுகின்றது. இதனால் வீரர்கள் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பமே கிடைக்கின்றது. குறிப்பிட்ட உள்ளூர் போட்டியை வைத்தே சிறந்த வீரர்களை இனங்காணவேண்டியுள்ளது. 

எனவே இலங்கை வீரர்களுக்கு வெளிநாட்டு கிரிக்கெட் அனுபவம் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படவேண்டும் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.

லீட்ஸ், ஹெடிங்லே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டி முடிவில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோது திமுத் கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1992 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பின்னர் முதல் தடவையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய இலங்கை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற பத்து அணிகள் பங்குபற்றிய 12ஆவது  உலகக் கிண்ண அத்தியாயத்தில் 6 ஆவது இடத்தைப் பெற்றது.

இந்தியன் ப்றீமியர் லீக், பிக் பேஷ், பிராந்திய கிரிக்கெட் போன்ற போட்டிகளில் இலங்கை வீரர்களை கூடுதலாக விளையாடுவதற்கு அனுமதித்து சர்வதேச அனுபவத்தைப் பெறுவதற்கு ஆவன செய்யவேண்டும் எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் இலங்கை அணி ஆறாம் இடத்தைப் பெற்றது மகிழ்ச்சி தருவதாக திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.

இந்த உலகக் கிண்ண அத்தியாயத்தில் இலங்கை அணியை எல்லோருமே குறைத்து மதிப்பிட்டிருந்தனர். மேலும் புதிய வீரர்கள் பலர் இடம்பெற்றனர். எமது அணி 3 வெற்றிகளை ஈட்டியதுடன் நான்கில் தோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகள் சீரற்ற கால நிலையால் கைவிடப்பட்டன. 

அப் போட்டிகள் விளையாடப்பட்டிருந்தால் நாங்கள் ஒருவேளை வென்றிருக்கலாம் அல்லது தோல்வி அடைந்திருக்கலாம். மற்றைய அணிகளுடன் ஒப்பிடும்போது எமது அணியே பலவீனமான அணியாக காணப்பட்டது. ஆனால் எம்மைவிட சில சிறந்த அணிகளிலும் பார்க்க நாங்கள் திறமையை வெளிப்படுத்தி ஆறாம் இடத்தைப் பெற்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்தியாவில் கிரிக்கெட் விளாட்டுக்கென சிறந்த கட்டமைப்பு உள்ளது. உள்ளூர் போட்டிகள் தரமான ஐ.பி.எல். போட்டி இருக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ளூர் போட்டி மாத்திரமே இருக்கின்றது. 

எனவே நாங்கள் நாடு திரும்பியபின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையினர், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தி இளம் வீரர்களுக்கான சிறந்த அத்திவாரத்தை அமைத்துக்கொடுக்க எண்ணியுள்ளோம் என்றார்.