ஆர்.ராம்

உயிர்த்த ஞாயிறு சம்­பந்­த­மாக பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்­கை­யி­டு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் சட்­ட­வ­லிமை மற்றும் நீதி­மன்­றத்தின் முன்­னி­லையில் இருக்கும் விடயம் தொடர்பில் அரச அதி­கா­ரிகள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பகி­ரங்­க­மாக சாட்­சியம் வழங்­கு­வது தொடர்­பாக நாளை மறு­தினம் செவ்­வாய்க்­கி­ழமை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்ப உள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வி­யின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

எதிர்­வரும் 10ஆம் திகதி என்னை முன்­னி­லை­யா­கு­மாறு அழைக்­கப்­பட்­டுள்ளேன். இதற்கு முன்­ன­தாக நான் சபையில் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் சட்­ட­வ­லிமை தொடர்­பிலும் அதில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எந்த அடிப்­ப­டையில் சாட்­சியம் அளிக்க முடியும் என்றும் சபா­நா­ய­க­ரி­டத்தில் கேள்வி எழுப்­ப­வுள்ளேன்.

காரணம், ஜனா­தி­ப­தி­யினால் உயிர்த்த ஞாயிறு சம்­பவம் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு சமர்ப்­பித்த அறிக்­கையை ஜனா­தி­பதி சட்­டமா அதி­ப­ரி­டத்தில் அனுப்பி வைத்­துள்ளார். அதன் பிர­காரம் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தற்­போது முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளரும், பொலிஸ் மா அதி­பரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அதே­நேரம், சட்­டமா அதி­பரும் குறித்த குழுவின் அறிக்கை உட்­பட தெரி­வுக்­குழு விட­யங்கள் தொடர்­பி­லான விட­யங்­களை முன்­வைத்து எழுத்­து­மூ­ல­மான ஆவ­ணத்­தினை சபா­நா­ய­க­ருக்கு அனுப்பி வைத்­துள்ளார். அது குறித்து சபா­நா­யகர் தனது நிலைப்­பாட்­டினை சபையில் வெளிப்­ப­டுத்த வேண்டும்.

மேலும் பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­ட­ளை­களை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பின்­பற்ற வேண்­டி­யது மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தொன்­றாகும். அவ்­வா­றி­ருக்க, பாரா­ளு­மன்ற நிலை­யி­யற்­கட்­டளை 36 ஈ இல், நீதித்­து­றைக்குள் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்கும் விடயம் சம்­பந்­த­மாக பாரா­ளு­மன்­றத்தில் கருத்­துக்­களை பகிர்ந்து கொள்ள முடி­யாது என்று குறித்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வா­றி­ருக்­கையில், அந்த கட்­ட­ளையை உடைத்­தெ­றி­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரால் முடி­யுமா என்ற கேள்­வியும் உள்­ளது. நீதி­மன்­றத்தில் உள்ள ஒரு­வி­ட­யத்­தி­னையே தெரி­வுக்­கு­ழுவும் விசா­ரணை செய்­கின்­றது. அவ்வாறு செய்ய முடியாது.

அவர்கள் நிலையியற்கட்டளைகளை மீறி செய்யும் அமர்வில் நானும் சென்று சாட்சியமளித்தால் நிலையியற்கட்டளைகளை மீறியவனாகி விடுவேன். அவ்வாறான ஒரு உறுப்பினராக வேண்டுமா என்பது தான் என்னுடைய வினாவாக இருக்கின்றது. இதற்கான பதிலை சபாநாயகர் வழங்க வேண்டும் என்றார்.