விக்ரம் நடிப்பில் தயாரான ‘கடாரம் கொண்டான்’ படம், வெளியான பிறகு ரசிகர்களால் சீயான் விக்ரம் என்று அழைக்கப்பட்டு வரும் விக்ரம், இதன் பின்னர் மிஸ்டர் கேகே என்று அழைப்பார்கள் என உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில், சீயான் விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி ஹாசன், மலையாள நடிகை லேனா, பூஜா குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடாரம் கொண்டான் ’படத்தின் டிரைலர் வெளியீடு விழா நடைபெற்றது.

 சென்னையிலுள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் பட நாயகன் சீயான் விக்ரம் பங்கு பற்றி பேசுகையில்,

“நான் ஏற்காட்டில் பாடசாலையில் கல்வி கற்றபோது, நிறைய திரைப்படங்களை திரையிடுவார்கள். எப்போதாவது தமிழ் படத்தை திரையிடுவார்கள் .அப்பொழுது நாங்கள் கமல் சார் நடித்த ‘வறுமையின் நிறம் சிகப்பு’ போன்ற படங்களை தெரிவு செய்து திரையிடுவோம். அவரைப் பார்த்துதான் நான் நடிப்பதற்கே வந்தேன். அவரின் எல்லா திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன்.

தற்போது யாராவது கமல் நடிப்பில் வெளியான படங்களில் எந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால்? அவர் நடிப்பில் வெளியான பதினாறு வயதினிலே படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று ஆசை என்று பதிலளிப்பேன். ஆனால் அவரைப்போல் நடிக்க எம்மால் இயலாது.

ஏனெனில் அந்த வயதிலேயே நல்லதொரு முதிர்ச்சியான கதாபாத்திரத்தை ஏற்று, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் கமல்ஹாசன். கமல் சார் நடிக்க வரும் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி .இந்த படத்தில் நாசரின் மூத்த மகன் அபி, மற்றொரு கதாநாயகனாக, அற்புதமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தை பின்னணி இசையுடன் பார்க்கும் பொழுது நன்றாக இருந்தது. இந்த படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்த படம் வெளியான பிறகு எமக்கு புதிய ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

இது தொடர்ந்து பேசிய படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன்,

“ விக்ரம், சீயான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகிவிட்டது என்று கவலை அடைந்திருக்கிறேன். சேது திரைப்படம் இன்னும் பல காலத்திற்கு முன்பே வந்திருக்க வேண்டும். கடாரம் கொண்டான் படத்தை நான் பார்த்தேன். கலைஞனாவதற்கு முன்பே நான் ரசிகன்.

படத்தை மிகவும் அனுபவித்து ரசித்து பார்த்தேன். ஒரு படத்திற்கு அனைத்தும் பொருத்தமாக அமையாது. ஆனால் கடாரங்கொண்டான் படத்திற்கு அது அமைந்திருக்கிறது. சந்தோஷம். இனி சீயான் விக்ரமை மிஸ்டர் கேகே  என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு நேர்த்தியாகவும், மிகவும் ஸ்டைலாகவும் நடித்திருக்கிறார்.

இந்த படம் ஜூலை 19 ஆம் திகதியன்று வெளியாகிறது. நிஜமாகவே இது ஆங்கில படம் போலத்தான் இருக்கும். இந்தப் படத்தை வெற்றி பெறவைக்க வேண்டிய கடமை ரசிகர்களாகிய  உங்களுக்கும் இருக்கிறது.” என்றார்.