ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 44 ஆவது போட்டி விராட் கோலி தலைமையிலான இந்தியா மற்றும் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கவுள்ளது.

6 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளியுடன் பட்டியலில் 2 ஆவது இடம் வகிக்கும் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. இதேவேளை 3 வெற்றி, 3 தோல்வி, 2 முடிவில்லை என்று 8 புள்ளியுடன் உள்ள இலங்கை அணி, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எனினும் இந்த ஆட்டத்தின் முடிவு இன்னொரு வகையில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று, அவுஸ்திரேலியா அணி தனது கடைசி லீக்க ஆட்டத்தில் தென்னாபிரிக்காவிடம் தோல்வியைத் தழுவினால் புள்ளி பட்டியலில் இந்தியா ‘நம்பர் வன்’ ஆகி விடும். 

அவ்வாறு நடந்தால் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதும். இல்லாவிட்டால் இங்கிலாந்துடன் மோதும்.

இதேவேளை இலங்கை அணி இப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரில் வெளியேற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது. அத்துடன் இப் போட்டியனாது இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் இறுதி சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண ஆட்டமாகும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 8 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 3 இல் இந்தியாவும், 4 இல் இலங்கையும் பெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.