தெற்காசிய நாடுகளை விட மேலைத்தேய நாடுகளில் தான் புரோஸ்டேட் புற்றுநோயால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. அவர்கள் ஆரம்ப நிலையில் இதனைக் கண்டறிந்து, சிகிச்சைகளை பெறாமல், புற்றுநோய் பரவுகிறதா? அங்கேயே இருக்கிறதா? என்பது குறித்து உரிய பரிசோதனைகள் மூலம் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்கிறார்கள்.

தெற்காசியாவைப் பொறுத்தவரை புரோஸ்டேட் புற்றுநோய் மிக குறைவாகவே இருந்தாலும், தற்பொழுது அதிகரித்துவருவதாகவே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இத்தகைய புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால், புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் பரவிய நிலையில் தான் இங்கு அதனை கண்டறிவதற்கான பரிசோதனைக்கு வருகை தருகிறார்கள்.

புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்துவதற்கு ரொபோடிக் சத்திர சிகிச்சை மற்றும் ரேடியேஷன் தெரபி எனப்படும் நுண்கதிர்வீச்சு சிகிச்சை என இரண்டு வகையினதான சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கிறது. புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் கட்டி இருந்தால் அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி விடுவது அல்லது வெளியில் இருந்து கதிர்வீச்சு சிகிச்சை மூலம் புற்று நோய் பரவாமல் தடுப்பது இந்த இரண்டு வகையான சிகிச்சைகளும் பலனளித்து வருகிறது.

சத்திரசிகிச்சையை பொருத்தவரை, திறந்த நிலையிலான சத்திர சிகிச்சையை விட, ரோபோட்டிக் சத்திரசிகிச்சையே நோயாளிகளுக்கும் வைத்தியர்களுக்கும் பலன் அளிப்பதாக இருக்கிறது. அத்துடன் ரோபோடிக் மூலம் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது பக்கவிளைவுகளும் குறைவாகவே இருக்கிறது.

அதேபோல் புற்றுநோயிலிருந்து அவர்கள் விரைவாக குணமடைந்து இயல்பான நிலைக்கு செல்கிறார்கள். அதேபோல் கதிர்வீச்சு சிகிச்சை, வெளியிலிருந்து குறிப்பிட்ட பகுதிக்கு கதிர்வீச்சு செலுத்தி புற்றுநோயை அகற்றுவது மற்றும் எங்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அங்கு மட்டுமே கதிர்வீச்சை செலுத்தி புற்றுநோய் கட்டியை அகற்றுவது என இரண்டு வகையினதான கதிர்வீச்சு சிகிச்சை உண்டு.

சில புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு கூட்டு சிகிச்சை தேவைப்படும். இவர்களுக்கு சத்திரசிகிச்சை யுடன் ரேடியேஷன் தெரபி, ஹோர்மோன் தெரபியும் வழங்க வேண்டியதிருக்கும். சிலருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் காரணமாக அவர்களுடைய புரோஸ்டேட் சுரப்பி முழுவதும் அகற்றப்பட்ட பிறகு, அவர்களுக்கு வேறு வகையினதான புற்றுநோய் தாக்க கூடும்.

ஏனெனில் புரோஸ்டேட் புற்றுநோய் அகற்றப்படும் போது அங்கிருந்து ஒரே ஒரு செல் வேறு எங்கேனும் சென்றிருந்தாலும் கூட, அவை மீண்டும் புற்று நோயை உருவாக்கக்கூடும். அதனால் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சத்திர சிகிச்சை, ரேடியேஷன் தெரபி, ஹோர்மோன் தெரபி என கூட்டு சிகிச்சை செய்து கொண்டாலும், இத்தகைய சிகிச்சைக்கு பின்னரும் அவர்கள் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டு காலம் வரை வைத்தியர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.