ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள புதிய படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இவ்விழாவில் கமலஹாசன் உரையாற்றுகையில்,

‘‘ராஜ்கமல் பட நிறுவனத்தை எங்கள் கனவுகளை நிறைவேற்றவும், இங்குள்ள படங்களை உலக தரத்துக்கு கொண்டு செல்லவும் உருவாக்கினோம். சினிமா துறை யாரை எங்கு கொண்டு செல்லும் என்று தெரியாது. சிலருக்கு பொங்கலும், சிலருக்கு பிரியாணியும் கொடுக்கும். சிலரை பட்டினி போடும். 

கொஞ்ச வருடங்களுக்கு முன்பே விக்ரம் படத்தை தயாரிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அதன்பிறகு அவர் நடித்து பல வெற்றி படங்கள் வந்துவிட்டன. ஊரே தூக்கி தோளில் வைத்த பிறகு நமக்கு என்ன வேலை என்று நினைத்தோம். இப்போது கடாரம் கொண்டான் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் நல்ல படங்களை பார்த்து சந்தோ‌ஷப்படுவேன். பாராட்டுவேன். 

கடாரம் கொண்டான் படத்தை ஜாலியாக ரசித்து பார்த்தேன். இது ரசிகர்களுக்கு பிடிக்கும். விக்ரமுக்காக நிச்சயம் இந்த படத்தை பார்க்க வேண்டும். அவரது ஸ்டைல் பிரமாதமாக வந்துள்ளது. திறமையான குழுவிடம் படத்தை ஒப்படைத்து  பதற்றம் இல்லாமல் இருந்தேன். என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிக்கும் திறமை இயக்குனருக்கு இருந்தது. அவர் பல பிரச்சினைகளை கையாளும் ஏற்பாடுகளை நான் செய்து இருக்கிறேன். ஒரு பெரிய அரசாங்கமே துரத்தும் அளவுக்கு நாங்கள் சினிமா எடுத்துள்ளோம்.  வருகிற 19–ந் திகதி கடாரம் கொண்டான் திரைக்கு வருகிறது. கதாநாயகனை சுற்றி கதை இல்லாமல் எல்லா நடிகர்களுக்கும் முக்கியத்துவம் பெற்று இருந்தால் அந்த படம் ஜெயிக்கும். இந்த படத்தில் அது அமைந்துள்ளது. சிவாஜி திருவிளையாடல் படத்தில் நாகேசை நின்று விளையாட விட்டு பக்கத்தில் ரசித்துக்கொண்டே இருப்பார். ஒரு கம்பீரமான நடிகரால்தான் இப்படி செய்ய முடியும். 

ரசிகர்கள் நல்ல படத்தை கைவிடாமல் ஓட்டி காட்ட வேண்டும். இந்த படம் ஆங்கில படம்போல் இருக்கிறது. தமிழில் நல்ல படங்கள் எடுத்து உலக தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். சினிமாவில் மேஜிக் என்பது கிடையாது. இங்கு உள்ளதெல்லாம் வியர்வை, கண்ணீர், இரத்தம். இது இல்லாமல் ஜெயிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.