(இங்கிலாந்தின் லீட்ஸிலிருந்து நெவில் அன்தனி)

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆற்றல் வெளிப்பாடுகள் மோசமாக இருந்ததனால் அரை இறுதி வாய்பபை இழந்தபோதிலும் எல்லாம் அஸ்தமித்துவிட்டது என்று கூறிவிட முடியாது. எதிர்காலத்துக்கான கிரிக்கெட் அணியைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என அணியின் முகாமையாளரும் கிரிக்கெட் சுற்றுப் பயணத் தெரிவாளருமான அஷன்த டி மெல் தெரிவித்தார்.  

எமது அணியினரின் ஆற்றல் வெளிப்பாடுகள் மிகத் தாழ்ந்த நிலையிலிருந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எமது எட்டு போட்டிகளில் துரதிருஷ்டவசமாக இரண்டு போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டன. மூன்று போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்ததுடன் இரண்டில் தோல்வி அடைந்தோம். இது நல்ல அறிகுறியல்ல. தரவரிசையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமானால் எமது அணி இதனைவிட திறமையை வெளிப்படுத்த வேண்டும். எமக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கின்றது. அப் போட்டியிலாவது எமது வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

தேசிய அணிக்குப் புரிம்பாக இலங்கை ஏ அணி வீரர்கள், வளர்ந்து வரும் அணி வீரர்கள், 19 வயதுக்குட்பட்ட அணி விரர்கள் ஆகியோர் குறித்து கவனம் செலுத்துவது எதிர்கால கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக அமையும் என நம்புகின்றேன். இந்த அணிகளில திறமைசாலிகள் பலர் இருககின்றனர். அவர்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்கான வழிமுறைகளை பொறுமையுடன் நடைமுறைப்படுத்தவேண்டும். இந்த வீரர்களின் ஆற்றல்வெளிபபாடுகளை பரீட்சிக்கவேண்டுமானால் பல போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.

உலகக் கிண்ணப் போட்டிகளில் அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, லசித் மாலிங்க, தனஞ்சய டி சில்வா, இசுறு உதான தங்களாலான அதிகப்பட்ச திறமைகளை வெளிப்படுத்தினர்.

சர்வதேச ஒருநாள் அரங்கில் 9 போட்டிகளில் மாத்திரமே அவிஷ்க பெர்னாண்டோ விளையாடியுள்ளார். அவர் அனுவசாலிபோல் துடுப்பெடுத்தாடியது பாராட்டத்தக்கது. இசுறு உதான (12), கசுன் ராஜித்த (7) ஆகியோரும் மிகக் குறைந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலேயே விளையாடியுள்ளனர். இவர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன் சுதந்திரமாக விளையாட அனுமதிக்கவேண்டும். எப்போதும் திடமனதுடன் விளையாடுவதும் ஒவ்வொரு வீரரினதும் மனோநிலை திடமாக இருப்பதும் அவசியம். 

2015 உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் சர்வதேச ஒருநாள் அரங்கில் விளையாடாமலிருந்து அணித் தலைவராக நியமிக்கப்பட்ட திமுத் கருணாரத்னவின் திறமையை மேலும் வளர்க்க அவருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கவேண்டும்.

கருணாரத்ன கணிசமான ஓட்டங்களைப் பெறக்கூடியவர். அவருக்கு தோடர்ந்து வாய்ப்பு வழங்கவேண்டும். அதிசிறந்த 20 வீரர்களையாவது தெரிவு செய்து அவர்களைப் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றச் செய்யவேண்டும். அதன் மூலம் அதிசிறந்த அணியை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும் என்றார்.