எங்கள் உறவுகளை கொலை செய்த இராணுவமே எங்களுக்கு பாதுகாப்பு தருவது போன்று வீதிகளிலும் பாடசாலைகளின் முன்பாகவும் நிற்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சி பூனகரி ஜெயபுரம்  மகாவித்தியாலயத்தில் 84 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய செயற்பாட்டு வகுப்பறை கட்டடம் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டது. இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிடைத்துள்ள இந்த வாய்ப்புக்களை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்காக பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும்.

தமிழர் தாயகப் பகுதிகளில் அதிகளவு இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்றது. எங்களுடைய உவவுகளை கொலை செய்த இராணுவமே இன்று  எங்களுக்கு பாதுகாப்புத்தருவது போன்று வீதிகளிலும் பாடசாலைகளிலும் நிற்கின்றது.எங்கோ நடைபெற்ற ஒரு சம்பவத்திற்காக எங்களை இராணுவப்பிடிக்குள் வைத்திருப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

மாணவர்களாகிய நீங்கள், கிடைக்கின்ற  சந்தர்ப்பங்களை சரியாகப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நாங்கள் பல நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்த ஓர் இனம். உங்களிடம் உள்ள வளங்களை சரியாகப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு நேற்று  பகல்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கட்டடத்தினை திறந்து வைத்தார். பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்ட அதிதிகளால் மங்கள விளக்கேற்றபட்டதை அடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து கட்டடம் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கருத்து தெரிவிக்கையில்,

இன்றும் நாம் பாடசாலைக்கு வருகை தரும்போது படையினரே எம்மை வரவேற்கின்றனர். குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதிகளில் இவ்வாறு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால் இங்குள்ள பாடசாலைகளில் இவ்வாறு கடமையில் ஈடுபடுகின்றனர்.

பிள்ளைகளே, உங்கள் பெற்றோரிடம் கேட்டுபாருங்கள். எத்தனை அப்பாக்களை கொன்றவர்கள், எத்தனையோ சகோதரதர்களை கொன்றவரகள், தமிழ் இனத்தையே அழித்தவரக்கள், இன படுகொலையை செய்தவர்கள் இன்று நற்பெயரை எடுப்பதற்காக இவ்வாறு நல்லவர்கள் போல் தம்மை காட்டிக்கொள்ள முனைகின்றனர். மொழிதெரியாதவர்கள் இவ்வாறு உதவி செய்வதுபோல் தம்மை காட்டிக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.