யாழ்.அரசடி வீதியை ஒரு வழி பாதையாக மாற்றுமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலகத்தினர் யாழ்.மாநகர சபைக்கும் , யாழ்.பொலிஸாரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட குறித்த வீதியில் , கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம் , யாழ்.இந்து மகளிர் கல்லூரி , இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை , என்பன அமைத்துள்ளன அத்துடன் யாழ்.இந்துக் கல்லூரி மற்றும் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் இவ்வீதி வழியாகவே பாடசாலைக்கு செல்கின்றனர். 

பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் குறித்த வீதியினை ஒரு வழி பாதையாக மாற்றுவதன் ஊடாக மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என பெற்றோர்கள் கல்வி அமைச்சின் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். 

அதனை அடுத்து செயலகத்தால் குறித்த கோரிக்கை யாழ்.மாநகர சபை மற்றும் பொலிஸாரிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை குறித்த வீதியின் ஊடாக பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனை சாரதிகள் கவனத்தில் எடுப்பதில்லை. பாடசாலைகளின் முன்னால் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாரும் கனரக வாகன சாரதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பெற்றோர்கள் கவலை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.