“50 ரூபாவைக் காட்டி காலம் கடத்தும் அரசியலை தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்து வருகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.  

அத்துடன், வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கட்டாயம் வழங்கப்படவேண்டும்.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி கனகராஜ் வலியுறுத்தினார்.

கொட்டகலை சி.எல்.எப். கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அனுஷா சிவராஜாவும் கலந்துகொண்டிருந்தார்.

(அரசியல் கூட்டணி)

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துவமான கட்சியாகும். தேசிய மற்றும் பிராந்தியக் கட்சிகளுடன் எமக்கு தொடர்பு இருக்கின்றது. 

அந்தவகையில் கூட்டணி அமைப்பது தொடர்பில் தேசிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இன்னும் இறுதி முடிவு எட்டப்படாததால் அவை குறித்த தகவல்களை தற்போது வெளியிடமுடியாது.

தேசிய கட்சியில் பங்காளியாக இருந்தாலும் நாம் தனித்துவத்தை இழந்ததில்லை. தேர்தல் காலத்தில் தனித்துவமாக தீர்மானம் எடுக்கும் சக்தி – பலம் எமக்கு இருக்கின்றது.

மலையக மக்களின் சார்பில் எமது கோரிக்கைகளை அறிக்கை ஊடாக முன்வைத்துள்ளோம். இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவோம். எமது மக்களுக்காக உண்மையாகவும், நேர்மையுடனும் சேவையாற்ற யார் முன்வருகின்றார்களோ, அவர் குறித்து பரீசிலித்து கூட்டணி குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.

(50 ரூபா சம்பளம்)

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட திகதியிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஐம்பது ரூபா வழங்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அறிவித்திருந்தார். அதன்பின்னர் ஏப்ரல் முதலாம் திகதி கிடைக்கும் என்றார். அப்போதும் கிடைக்கவில்லை. பின்னர் மே முதலாம் திகதி என்றார். ஆனால், இன்னும் கிடைக்கவில்லை.

140 ரூபா கேட்டவர்கள் இன்று 50 ரூபாவில் வந்து நிற்கின்றார்கள். அமைச்சரவைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், காலம் கடந்தாமல், தொழிலாளர்களை ஏமாற்றாமல் – இழுத்தடிப்பு செய்யாமல் 50 ரூபாவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம்.

750 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துவிட்டு, இதற்கு மேல் பெற்றுக்கொடுக்க எவராவது நடவடிக்கை எடுத்தால் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என எமது தலைவர் அறிவித்திருந்தார். அதே நிலைப்பாட்டில்தான் இன்னும் நாம் இருக்கின்றோம்.

(மரண தண்டனை)

மரண தண்டனை தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இது தொடர்பில் எமது அரசியல் உயர்பீடக் கூட்டத்திலும் கலந்துரையாடினோர். உரிய நேரத்தில் எமது முடிவு அறிவிக்கப்படும்.” என்றனர்.