சோபாவும் சுயாதிபத்தியமும் : அமெரிக்க - இலங்கை உடன்படிக்கைகள் குறித்த விசனங்கள் ஏன்?

Published By: R. Kalaichelvan

03 Jul, 2019 | 06:53 PM
image

(பி.கே.பாலசந்திரன்)

அமெரிக்காவுடன் படைகளின் அந்தஸ்த்து உடன்படிக்கை (Status of Forces Agreement – SOFA)  கைச்சாத்திடும் தறுவாயில் இலங்கை இருக்கிறது.மிகவும் சர்ச்சைக்குரியதாக நோக்கப்படுகின்ற இந்த உடன்படிக்கை கொள்கையளவில் இலங்கையை இலட்சக்கணக்கான அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளினதும், பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொந்தராத்துக்காரர்களின் மகிழ்ச்சியானதொரு வேட்டைக்களமாக மாறிவிடக்கூடும் என்று மூலோபாய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.

தயாராகிக் கொண்டிருக்கும் இன்னுமொரு சர்ச்சைக்குரிய உடன்படிக்கை மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்திடமிருந்து (Millennium Challenge Corporation – MCC ) 48 கோடி அமெரிக்க டொலர்களைப் பெறுவது தொடர்பானதாகும்.

 இந்த உடன்படிக்கை அமெரிக்க காங்கிரசும், இலங்கை அமைச்சரவையும் அங்கீகரிக்கும் பட்சத்தில் பல உட்கட்டமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். 

ஆனால் பிரதானமாக கிழக்குக் கரையோரத்தையும், மேற்குக் கரையோரத்தையும் இணைக்கும் 200 கிலோமீட்டர் கொழும்பு – திருகோணமலை பொருளாதார வழித்தடத்தை(Colombo – Trincomalee Economic Corridor – CTEC) அமைக்கும் திட்டம் இதில் உள்ளடங்கியுள்ளது.

மிலேனியம் சவால் கூட்டுத்தாபன உடன்படிக்கை அரசினால் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை விவசாயிகள் பராதீனப்படுத்துவதற்கு வசதியாக நாட்டின் காணிச்சட்டங்களில் அரசாங்கம் மாற்றம் செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. 

அவ்வாறு பாராதீனப்படுத்தும் காணிகளை வாங்குபவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக இருக்க முடியுமென்று இலங்கையின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கலாநிதி பாலித கோகன கூறுகிறார்.

கொழும்பு – திருகோணமலை பொருளாதார வழித்தடம் 1987 ஜுலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையை மீறுவதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் இந்தியாவிற்குப் பாதகமாக அமையக்கூடிய ஒரு இராணுவ நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதற்கு வெளிநாடொன்றுக்கு இலங்கைத்தீவின் எந்தவொரு துறைமுகம் அல்லது விமான நிலையத்தை வழங்குவதிலிருந்து இலங்கை அரசாங்கத்தைத் தடுக்கிறது. அமெரிக்கா திருகோணமலையை இராணுவ போக்குவரத்து – தளபாட விநியோகத் தளமாக (Logistic Base) அபிவிருத்தி செய்ய நோக்கம் கொண்டுள்ளது என்றும் கலாநிதி கோகன கூறினார்.

நாட்டின் சுயாதிபத்தியத்தைப் பாரதூரமாகப் பாதிக்கும் வகையில் அமைவதால் தான் சோபாவை கடுமையாக எதிர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார்.

தற்போதைய வடிவில் சோபா ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்குக் கூறுமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு ஜனாதிபதி பணிப்புரையும் விடுத்திருந்தார். 

பொதுவில் அமெரிக்கா சார்பானவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சோபா தொடர்பில் ஐயுறவுகளைக் கொண்டிருக்கிறார். அவரது சம்மதம் இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவரான வெளியுறவு அமைச்சர் மாரப்பன சோபா குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்கர்களுக்குக் கூறியிருக்க மாட்டார். நிதியமைச்சர் மங்கள சமரவீர மாத்திரமே சோபாவையும், மிலேனியம் சவால் கூட்டுத்தாபன உடன்படிக்கையையும் முழுமையாக ஆதரிக்கிறார்.

2017 நுழைவுரிமை உடன்படிக்கையும், சோபாவும் 2007 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட நுழைவுரிமை மற்றும் சேவைகள் உடன்படிக்கை (Access and Services Agreement – ACSA) எளிதான ஒன்றாகும். இலங்கை இராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி நடவடிக்கைகளுக்காக வருகின்ற அமெரிக்கத் தருப்புக்களுக்கு வசதி செய்வதை நோக்கமாகக் கொண்டதென்று இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும், தற்போது பாத் பைன்டர் பவுண்டேஷனில் கடல்சார் பாதுகாப்பு நிபுணராகப் பணியாற்றுபவருமான அட்மிரல் ஜயநாத் கொலம்பகே கூறினார்.

அக்ஸா 2007 பத்துவருட காலத்திற்கானது என்றே நிர்ணயிக்கப்பட்டது. 2017 இல் அதனைப் புதுப்பிப்பதற்காகப் பரிசீலித்த போது அது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக மாறியிருந்தது.

அதாவத ஐம்பதிற்கும் மேலான இணைப்புக்களைக் கொண்ட 83 பக்க ஆவணமாக அது இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அது வரையறை எதனையும் கொண்டிருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் அதை முடிவிற்குக் கொண்டுவர விரும்பினால் 180 நாட்கள் முன்னறிவித்தலைக் கொடுக்க வேண்டும் என்ற ஏற்பாடொன்றைத் தவிர வேறெந்தக் காலவரையறையையும் அது கொண்டிருக்கவில்லை என்று விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக்கட்டத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த கலாநிதி கோகன கூறினார்.

அதையடுத்து அக்ஸாவை விரிவானதொரு சோபாவினால் பதிலீடு செய்யும் யோசனையை அமெரிக்கா முன்வைத்தது. 'சன்டே டைம்ஸ்" பத்திரிகையில் வெளியான கட்டுரையில் காணப்பட்ட விபரங்களின்படி அமெரிக்க அரசாங்கம் அதன் விமானங்களும், கப்பல்களும் எந்தவிதமான சோதனைக்கும் உட்படாதிருக்கக் கூடியவாறான ஏற்பாடொன்றை விரும்புகிறது. 

இதன் அர்த்தம் அமெரிக்க இராணுவக் கப்பலோ அல்லது விமானமோ இலங்கையின் துறைமுகம் ஒன்றிற்கு அல்லது விமான நிலையத்தில் தரித்து நிற்கும் போது கடற்படை, கரையோரக் காவற்படை அல்லது சுங்கத்திணைக்களம் போன்ற இலங்கை பந்தோபஸ்த்து அமைப்புக்கள் எவற்றினதும் அதிகாரிகள் அந்தக் கப்பலிலோ, விமானத்திலோ ஏறி சோதனை எதையும் செய்ய முடியாது. 

தரையில் கூட அமெரிக்க வாகனங்களை அவர்கள் சோதனையிட முடியாது, ஆனால் இவ்வாறு சோதனை செய்வதென்பது ஒரு நாட்டின் சுயாதிபத்திய உரிமையாக சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

இலங்கைக்குள் அனுமதிப்பத்திரங்கள், சுங்கத்தீர்வைகள், வரிகள் மற்றும் எந்தவொரு கட்டண அறவீடுகளில் இருந்தும் விதிவிலக்களிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது.

இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் 'கடமையிலிருக்கும் போது" அமெரிக்கத் துருப்புக்கள் அவர்களின் சீருடைகளை அணிவதற்கும், ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களைக் கொண்டு திரிவதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டும் என்றும் வாஷிங்டன் கோருகிறது. 

ஆனால் இலங்கை அரசியலமைப்பினதும், வழமையான சட்டங்களினதும் பிரகாரம் சொந்த ஆயுதப்படைகளுக்கும், பொலிஸாருக்கும் மாத்திரமே இந்த சிறப்புரிமைகள் உள்ளது.

மேலும் அமெரிக்கத் துருப்புக்களும், கொந்தராத்துக்காரர்களும் அவர்களிடமுள்ள அமெரிக் அடையாள ஆவணங்களை மாத்திரம் பயன்படுத்தி தனியாகவோ அல்லது கூட்டாகவோ இலங்கைக்குள் பிரவேசிக்கவும், வெளியேறவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வாஷிங்டன் விரும்புகிறது. இதன் அர்த்தம் அவர்கள் கடவுச்சீட்டையோ அல்லது விசாவையோ கொண்டுதிரியப் போவதில்லை என்று 'சன்டே டைம்ஸ்" கூறுகிறது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலுள்ள தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளும், சிறப்புரிமைகளும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள், இராணுவ கொந்தராத்துக்காரர்கள் மற்றும் இராணுவ விநியோகஸ்த்தர்களுக்கும் வழங்கப்படுவதற்கு சோபா வகைசெய்வதாக அமைகிறது.

அமெரிக்க இராணுவத்தினர் தங்குவதற்கும், பொழுதுபோக்குவதற்குமான நிலையமொன்றை இங்கு அமைப்பதனால் ஏற்படக்கூடிய சமூகக் கெடுதிகள் குறித்து கலாநிதி பாலித கோகன கவனம் செலுத்திய அதேவேளை, அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கொந்தராத்துக்காரர்கள் என்ற வடிவில் அமெரிக்கக் கூலிப்படையினர் இலங்கைக்குள் பிரவேசிக்கக்கூடிய சாத்தியம் குறித்து அட்மிரல் கொலம்பகே எச்சரிக்கை செய்கிறார். (உதாரணமாக பிளக் வாட்டர் என்ற இராணுவக் கம்பனி மத்திய கிழக்கில் இயங்குகிறது) சுமார் 20 இலட்சம் அமெரிக்க அதிகாரிகள் இலங்கையில் ஏதாவதொரு வழியில் செயற்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்படலாம் என்று கோகனவும், கொலம்பகேயும் கூறுகின்றனர்.

இராஜதந்திர உரிமைகளைப் பொறுத்தவரை, பரஸ்பர செயற்பாட்டை வலியுறுத்தும் 1996 இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தை சோபா மீறுகிறது. அமெரிக்காவுக்கு இலங்கையில் கிடைக்கின்ற அதே இராஜதந்திர சிறப்புரிமைகளை அமெரிக்காவில் உள்ள இலங்கையின் இராஜதந்திரிகளுக்கு வாஷிங்டன் வழங்கவில்லையென்றால் இலங்கை அரசாங்கம் இந்த சட்டத்தின் பிரகாரம் அந்த சிறப்புரிமைகளை இங்குள்ள அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு மறுக்கமுடியும். இலங்கையில் இருக்கின்ற வெளிநாடொன்றின் தூதரகத்துக்கும் அதனுடன் தொடர்புபட்ட நபர்களுக்கும் மேற்கூறப்பட்ட சட்டத்தின் பிரகாரம் வழங்கப்படுகின்றவற்றையும் விட குறைவான சிறப்புரிமைகளும் விதிவிலக்குகளுமே அந்த நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் அதனுடன் தொடர்புபட்ட நபர்களுக்கும் வழங்கப்படுகிறதென்று வெளியுறவு அமைச்சருக்கு தெரியவந்தால் அவர் வர்த்தமானி பிரகடனம் ஒன்றின் மூலம் இங்குள்ள அந்த நாட்டின் தூதரகத்துக்கு அந்த உரிமைகளை ரத்துச்செய்யமுடியும் என்று சட்டம் கூறுகிறது.

எனவே 1996 இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் அடிப்படையில் நோக்கும்போது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் 1995 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட சோபாவை 2019 இல் எதிர்பார்க்கப்படுகின்ற சோபாவுக்கு தன்னியல்பாக நீடிக்க முடியாது.

வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இறுதியாக அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது அங்கு இராஜாங்க திணைக்களத்துக்கும் பாதுகாப்பு திணைக்களத்துக்கும் இது கூறப்பட்டது.

அணிசேரா கொள்கைக்கு பாதிப்பு எந்த நாட்டையும் எதிரியாக நோக்காமல் சகல நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவதற்கு விரும்புகின்ற ஒரு அணிசேரா நாடு என்றவகையில் இலங்கைக்கு இருக்கின்ற அந்தஸ்தை சோபா பாரதூரமாகப் பாதிக்கிறது என்று கலாநிதி கோஹன கூறுகிறார்.

'எந்தவொரு நாட்டினதும் அச்சுறுத்தலின் கீழ் நாம் இல்லையென்பதால், ஒரு வல்லரசு நாட்டுடன் எதற்காக நாம் இத்தகைய பரந்தளவிலான உடன்படிக்கையொன்றை நாம் செய்யவேண்டும் ? இலங்கையில் ஒரு

தளத்தை அமைப்பதன் மூலமாக சீனாவுடனான தனது மோதலுக்குள் எம்மை இழுத்துவிடுகின்ற நோக்கம் அந்த வல்லரசுக்கு இல்லையொன்றால் எம்முடன் இத்தகைய உடன்படிக்கையொன்றை செய்வதில் ஏன் தீவிர அக்கறை காட்டவேண்டும்?" என்று கோஹன கேள்வியெழுப்பினார்.

சீனா வல்லமை கொண்ட நாடாக வளர்ந்துவருவதைத் தொடர்ந்து இந்தோ -- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்துகின்றமையால், சோபா சீன - அமெரிக்க மோதல் ஒன்றுக்குள் இலச்கையை பெரும்பாலும்இழுத்துவிடும் ஆபத்து இருக்கிறது என்று அவர் எச்சரிக்கை செய்கிறார்.

கபடத்தனமான இந்திய மௌனம் இந்து சமுத்திரத்திலும் தெற்காசியப் பிராந்தியத்திலும் வல்லமைபொருந்திய ஒரு நாடாக விளங்கும்

இந்தியா அமெரிக்காவுடனான இலங்கையின் சோபா தொடர்பான விவகாரத்தில் மௌனம் சாதிக்கின்றது என்று அட்மிரல் கொலம்பகே சுட்டிக்காட்டுகிறார். இலங்கையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதையோ அல்லது இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க தந்திரோபாயத்துடன் முழுமையாக ஒத்துப்போகவோ இந்தியா விரும்புவதாக கொலம்பகே நம்பவில்லை.

'வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக சீனாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கே இந்தியா விரும்புகிறது.எனவே, இந்தியா தனக்கே உரிய முறையில் சந்தடியின்றி நடவடிக்கைகளை எடுக்கின்றது என்றே தோன்றுகிறது என்று அவர் கூறுகிறார்.

'கடந்த காலத்தில் இந்தியா கடல் பாதுகாப்பில் பெருமளவுக்கு கவனம் செலுத்தாமல் இருந்தது.அதனாலேயே 26/11 மும்பை தாக்குதல் இடம்பெறக்கூடியதாக இருந்தது. கடல் பாதுகாப்பில் அக்கறையில்லாத இந்திய போக்கே இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஊடுருவலுக்கும் வழிசெய்தது" என்று கொலம்பகே சுட்டிக்காட்டினார்.

மிலேனியம் சவால் கோர்ப்பரேசனின் நிதியைப் பயன்படுத்தி திருகோணமலையை போக்குவரத்து தளமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் சோபாவுடன் தொடர்புடையதாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் கலாநிதி கோஹன இதனால் இந்தியா கவலைப்படவேண்டும் என்கிறார்.

இந்தியாவுக்கு பாதகமான முறையில் இராணுவ நோக்கங்களுக்கு எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இலங்கையின் துறைமுகங்களில் அல்லது விமானநிலையங்களில் எந்தவொன்றுமே வழங்கப்படக்கூடாது என்று 1987 இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கை கூறுகிறது.அது நாம் அலட்சியம் செய்யமுடியாத இருதரப்பு உடன்படிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார காரணி ஆனால், சோபாவின் உறுதியான ஆதரவாளராக நிதியமைச்சர் மங்கள சமரவீர விளங்குகிறார்.

சோபா ஆபத்தானது என்ற குற்றச்சாட்டை அவர் மறுதலித்திருக்கிறார். 'ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் 1995 ஆம் ஆண்டில் சோபா கைச்சாத்திடப்பட்டது. அது நாட்டுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 தற்போது நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகள் அந்த உடன்படிக்கையைப் புதுப்பிப்பதைப் பற்றியவையே " என்று சமரவீர கூறுகிறார்.

'மேலும், சுமார் 370 கோடி டொலர்கள் பெறுமதியான பொருட்களையும் சேவைகளையும் வருடாந்தம் எம்மிடமிருந்து கொள்வனவு செய்கின்ற நாடு என்பதால் அமெரிக்காவை அந்நியப்படுத்துவது இலங்கையின் பொருளாதார நலன்களுக்கு பாதகமாக அமையும்.ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி பங்காளியாக இருக்கிறது. இலங்கையின 500 கோடி டொலர் ஆடைக்கைத்தொழில் துறையின் உற்பத்திகளில் மிகவும் பெருமளவு சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கொள்வனவு செய்கின்றன " என்று நிதியமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21