சர்­வ­தே­சத்­திலும் உள்­நாட்­டிலும் எதிர்ப்­புகள் வலு­வ­டைந்­துள்ள போதிலும் தூக்குத் தண்­ட­னையை நிறை­வேற்­றியே ஆக வேண் டும் என்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்தில் தளர்ச்­சியைக் காண முடி­ய­வில்லை. 

மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி­களை தூக்கில் இட்டு தண்­டிக்­கின்ற நடை­முறை நான்கு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. மரண தண்­ட­னைக்குப் பதி­லாக அந்தக் கைதிகள் ஆயுட்­கால சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்து வந்­துள்­ளார்கள். ஜனா­தி­ப­தியின் தூக்குத் தண்­டனை நிறை­வேற்றத் தீர்­மானம் இந்த நடை­மு­றைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வழிவகுத்­துள்­ளது.

எதிர்ப்­புகள் இருந்த போதிலும், மரண தண்­டனைக் கைதி­களை – குறிப்­பாக போதைப் பொருள் குற்றச் செயல்­க­ளுக்­காக மரண தண்­டனை வழங்­கப்­பட்­ட­வர்­களைத் தூக்கில் இட வேண்டும் என்ற பிடி­வா­தத்தை அவர் கைவி­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை.  

போதைப்பொருள் குற்றச் செயல்­க­ளுக்­காக மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள நான்கு பேரைத் தெரிவுசெய்து அவர்­க­ளு க்கு தூக்குத் தண்­டனையை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்று பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் அதி­ர­டி­யாக அவர் அறி­வித்­தி­ருந்தார். மூன்று தினங்­களின் பின்னர், ஊடகப் பிர­தா­னிகள் செய்­தித்­தாள்­களின் ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது அந்த அறி­விப்பை அவர் நேர­டி­யா­கவே அழுத்தி உரைத்­தி­ருந்தார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் சட்­ட­வி­ரோத போதைப்­பொருள் கடத்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­கான சர்­வ­தேச தின­மா­கிய ஜூன் 26ஆம் திக­தி­யை­யொட்டி நடத்­தப்­பட்ட போதை ஒழிப்பு வாரத்தின் இறு­தி ­நா­ளா­கிய ஜூலை முதலாம் திகதி தனது தீர்­மா­னத்தை மூன்றாம் முறை­யாக வெளி­யிட்­டுள்ள அவர், தனது நிலைப்­பாட்டை நியா­யப்­ப­டுத்தி தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றத்தை அவர் மீண்டும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். 

கடந்த 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி இலங்­கையில் இறு­தி­யாக தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. அதன் பின்னர் நீதி­மன்­றங்­க­ளால் மிக மோச­மான குற்­றச்­சாட்டு வழக்­கு­களில் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்­ட­வர்­க­ளுக்கு மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட போதிலும், அவர்கள் தூக்­கி­லி­டப்­ப­ட­வில்லை. மாறாக அந்தத் தண்­டனை ஆயுள் தண்­ட­னை­யாக மாற்­றப்­பட்டு அந்தக் கைதிகள் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்­றார்கள். 

ஏன் தூக்கில் இட வேண்டும்....?  

இவ்­வாறு ஆயி­ரத்து நூறுக்கும் மேற்­பட்­ட­வர்கள் மரண தண்­டனைக் கைதி­க­ளாக சிறை­வாசம் அனுபவித்து வரு­கின்­றார்கள். இவர்­களில் போதைப்பொருள் குற்­றத்­துக்­காக மரண தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­களில் நான்கு பேரைத் தெரிவு செய்து, அவர்­க­ளையே தூக்கில் இடு­வ­தற்­கான உத்­த­ரவில் கையெ­ழுத்­திட்­டி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­தி­ருந்தார். 

போதைப்பொருள் கடத்தல், போதைப் பொருள் விநி­யோகம், போதைப்பொருள் விற்­பனை போன்ற போதைப்பொருள் பாவ­னை­யுடன் தொடர்­பு­டைய குற்றச் செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே தூக்குத் தண்­ட­னையை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் எழுந்­துள்­ளது என்­பதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பாடு. 

பாட­சாலை மாண­வர்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் உள்­ளிட்ட இலட்சக் கணக்­கான இளை­ஞர்­களின் வாழ்க்­கையைக் காவு கொள்ளும் சட்­ட­வி­ரோத போதைப்பொருள் கடத்­தலைத் தடுக்­கவும், தேசத்தின் எதிர்­கால சந்­த­தி­யி­னரின் வாழ்க்­கையைப் பாது­காப்­ப­தற்­குமே போதைப்பொருள் கடத்­தல்­கா­ரர்­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட வேண்டும் என அவர் குறிப்­பிட்­டுள்ளார். போதைப்பொருள் பாவ­னையின் கார­ண­மாக பெரு­ம­ள­வி­லான பெண்கள் உட்­பட வரு­டாந்தம் 50 ஆயிரம் பேர் சிறைக்குச் செல்­கின்­றார்கள். சர்­வ­தேச பாட­சா­லைகள் தொடக்கம் அர­சாங்கப் பாட­சா­லைகள் வரை­யி­லான பாட ­சாலை மாண­வர்கள் மத்­தியில் போதைப் பொருள் பாவனை வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றது. விசே­ட­மாக பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இது இடம்­பெற்று வரு­கின்­றது. 

போதைப்பொருள் பாவ­னையில் மாண­வர்­க­ளுக்கு போதைப்பொருள் கும்­பல்கள் இல­வச பயிற்­சி­ய­ளிக்­கின்­றன. இனத்தை அழிப்­ப­தற்கு போதைப்பொருள் முக்­கிய ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. எனவே போதைப் பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்­பது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவின் நியா­யப்­பா­டாகும்.

ஆனால், போதைப்பொருள் குற்­ற­வா­ளி­களைத் தூக்கில் இட்டு தண்­டிக்க வேண்டும் என்ற அவ­ரது கொடூ­ர­மான அதி­ரடி அறி­விப்பு, சர்­வ­தேச நாடு­க­ளையும், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பு­க­ளையும் அதிர்ச்­சி­ய­டையச் செய்­தி­ருந்­தது. தூக்­கி­லிட்டு கொல்­லு­கின்ற மரண தண்­டனை நிறை­வேற்­றத்தை சர்­வ­தேச நாடுகள் வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளன. சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் அது அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல் எனச் சாடி­யுள்­ளன. உள்ளூர் மட்­டத்­திலும் இது விட­யத்தில் அவ­ருக்கு எதிர்ப்­புகள் அதி­க­ரித்­துள்­ளன. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்சித் தலைவர் மகிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர்.

இந்தத் தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கைவிட வேண்டும் என பிரிட்டன், கனடா, நோர்வே மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் உள்­ளிட்ட சர்­வ­தேச நாடுகள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன. தூக்குத் தண்­ட­னையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் முயற்சி, உலக நாடு­களின் தண்­டனை நிறை­வேற்ற நடை­மு­றைக்கு முர­ணா­னது என அந்த நாடுகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. 

எச்­ச­ரிக்கை
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இந்தத் தீர்­மானம், பொரு­ளா­தார ஏற்­று­மதி, உல்­லாசப் பய­ணத்­துறை, சர்­வ­தேச தரத்­தி­லான மனித உரி­மை­களைப் பேணுதல், போன்ற பல்­வேறு அம்­சங்­களில் சர்­வ­தே­சத்தின் நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலை­மைக்கு இலங்­கையைத் தள்­ளி­யுள்­ளது. போதைப்பொருள் குற்றச் செயல்­க­ளுக்­காக நான்கு மரண தண்­டனைக் கைதிகள் தூக்­கி­லி­டப்­ப­டு­வார்கள் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்த அன்­றைய தினமே,  அத்­த­கைய தண்­டனை நட­வ­டிக்கை சட்­ட ­வி­ரோ­த­மா­னது என்று சர்­வ­தேச மன்­னிப்புச் சபை கடும் தொனியில் அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தது. 

சர்­வ­தேச கொலைக்­குற்­றத்தைப் போன்று போதைப்பொருள் குற்றச் செயலை அதி தீவி­ர­மான குற்­றச்­செ­ய­லாகக் கொள்ள முடி­யாது என்றும், அதற்­கான தூக்குத் தண்­ட­னையை சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­க­ளுக்கு அமைய வரை­யறை செய்ய வேண்டும் என்றும் சர்­வ­தேச மன்­னிப்புச் சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.  

தூக்குத் தண்­டனை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மானால், பயங்­க­ர­வாத எதிர்ப்புச் செயற்­பா­டுகள், கொள்கை வகுத்தல் போன்ற தேசிய பாது­காப்பு சட்ட நட­வ­டிக்­கை­களைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான  தொழில்­நுட்ப உத­விகள் உள்­ளிட்ட விட­யங்­களில் இலங்­கை­யுடன் ஒத்­து­ழைப்­பது தவிர்க்க முடி­யாத வகையில் கடி­ன­மா­ன­தாக இருக்கும் என்று பிரித்­தா­னியா தெரிவித்துள்­ளது. மரண தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு, தூக் கில் இட்டு தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­மானால் இலங்கை விட­யத்தில் தனது நிலைப்­பாட்டை மறுப­ரி­சீ­லனை செய்ய நேரிடும் என்று பிரித்­தா­னியா கூறி­யுள்­ளது. 

அத்­துடன் மரணதண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தில்லை என்ற கொள்­கையில் தலை­கீ­ழான மாற்றம் ஏற்­ப­டு­மானால், இலங்­கையின் சர்­வ­தேச நிலைப்­பாட்­டுக்கும், சுற்­றுலாத் தலம் என்ற அதன் கீர்த்­தியின் ஊடான வர்த்­தக மைய வளர்ச்­சிக்கும் பெரும் பின்­ன­டைவே ஏற்­படும் என்றும் பிரித்­தா­னியா எச்­ச­ரித்­துள்­ளது. முன்­னைய ஆட்சிக் காலத்தின் மனித உரிமை மீறல்­க­ளுக்­காக இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த ஐரோப்­பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கை­களை கடு­மை­யான போராட்­டத்தின் பின்னர் கடந்த வரு­டமே அரசு மீண்டும் பெற்­றி­ருந்­தது. வரிச்­ச­லு­கைகள் நிறுத்­தப்­பட்­டி­ருந்­த­தால் 500க்கும் மேற்­பட்ட உள்ளூர் உற்­பத்திப் பொருட்­களின் ஏற்­று­மதிப் பொரு­ளா­தா­ரத்தில் நாடு பெரும் முட்­டுக்­கட்­டைக்கு முகம் கொடுத்­தி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த நிலையில், தூக்குத் தண்­டனை மீண்டும் கொண்­டு­வ­ரப்­ப­டு­மே­யானால், அது உல­கத்­துக்குத் தவ­றான சமிக்­ஞை­யையே கொண்டு செல்லும். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை தொடர்­பி­லான பொறுப்­பு­களில் சர்­வ­தேச கடப்­பா­டு­களை அர்த்­த­முள்ள வகையில் செயற்­ப­டுத்­து­வதைத் தொடர்ந்து கண்­கா­ணிப்போம் என்று ஐரோப்­பிய ஒன்­றியம் அறி­வித்­துள்­ளது. இதன் மூலம் தனது  அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள ஐரோப்­பிய ஒன்­றியம், ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லு­கை­களை நிறுத்த வேண்டி இருக்கும் என்ற எச்­ச­ரிக்­கை­யையும் வெளி­யிட்­டுள்­ளது. 

நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள்

இத­னை­ய­டுத்து, தூக்குத் தண்­ட­னை  நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­கான காரணம் குறித்து ஐ.நா. செய­லாளர்  நாயகம் அன்டோ­னியோ குட்­ர­ஸுக்கு தொலை­பேசி வழி­யாக விளக்­க­ம­ளித்­துள்­ள­தாகக் கூறி­யுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தீர்­மா­னத்தில் இருந்து பின்­வாங்கப் போவ­தில்லை என்றும் தெரி­வித்­துள்ளார். யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் நாட்டில் போதைப்பொருள் கடத்­தல்­களும், விநி­யோ­கமும் அதி­க­ரித்­துள்­ளன. கடல்வழி­யாக கேரளக் கஞ்­சாவும், ஆகாய மார்க்­க­மாக அபின் உள்­ளிட்ட பயங்­கர விளை­வு­களை ஏற்­ப­டுத்த வல்ல போதைப்பொருட்­களும் நாட்­டுக்குள் கடத்தி வரப்­பட்­டி­ருக்­கின்­றன. பெரும் கொள்­க­லன்­களில் பெரும் தொகையில் கடத்தி வரப்­பட்ட இந்தப் போதைப்பொருட்கள் அதி­கா­ரி­க­ளால் ஒன்­றுக்கும் மேற்­பட்ட தட­வை­களில் கண்டுபிடிக்­கப்­பட்­டி­ருந்­தன. 

அதே­போன்று பெரும் தொகை­யான கேரள கஞ்சா கடத்­தல்கள் இடம்­பெ­று­வ­தையும் பொலிஸாரும், அதி­கா­ரி­களும் கண்டுபிடித்த வண்ணம் இருக்­கின்­றனர். ஆனால் இந்த போதைப்பொருட்கள் யாரால், எங்­கி­ருந்து கடத்தி வரப்­ப­டு­கின்­றன, எங்கு கொண்டு செல்­லப்­ப­டுகின்றன, இதன் பின்­ன­ணியில் இருந்து செயற்­ப­டு­வது யார், எத்­த­கைய செல்­வாக்­குடன் அந்தச் செயற்­பா­டுகள் என்ன வகையில் இடம்­பெ­று­கின்­றன என்­பது பற்­றிய விப­ரங்­களை பொலிஸாரோ அல்­லது போதைப்­பொருள் கடத்­தல்­களை முறி­ய­டிப்­ப­தற்­காகச் செயற்­ப­டு­கின்ற அதி­கா­ரி­களோ இது­வ­ரையில் கண்டுபிடித்­த­தாகத் தெரி­ய­வில்லை. 

போதைப்பொருள் பாவனை, போதைப் பொருள் கடத்தல், விற்­பனை போன்ற குற்றச் செயல்­களைத் தடுப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்ள சாதா­ரண குற்­ற­வியல் சட்­டங்கள் தொடக்கம் சிறப்புச் சட்­டங்­களை சம்­பந்­தப்­பட்­ட­வர்­களும், உரிய அதி­கா­ரி­களும் சரி­யான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தாத நிலை­மையே போதைப்பொருள் குற்றச் செயல்கள் அதி­க­ரிக்க முக்­கிய கார­ண­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. 

இந்த நிலையில், மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்ள போதைப்பொருள் குற்றக் கைதி­களை தூக்­கி­லிட்டுத் தண்­டிக்­கின்ற ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கைக்கு எதி­ராக உள்ளூர் மனித உரிமை அமைப்­புகள், சட்­டத்­த­ர­ணிகள், மனித உரி­மைகள் மற்றும் ஜன­நா­யகச் செயற்­பாட்­டா­ளர்கள், மதத் தலை­வர்கள் மற்றும் மரண தண்­டனைக் கைதிகள் உள்­ளிட்ட பல தரப்­பி­னரும் நீதி­மன்­றத்தில் சுமார் பத்து அடிப்­படை உரிமை மீறல் வழக்­கு­களைத் தாக்கல் செய்­துள்­ளனர். 

ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்­துக்­க­மைய போதைப் பொருள் குற்றத் தண்­டனைக் கைதிகள் நால்­வரை, சிறைச்­சாலை ஆணை­யா­ளரும், வெலிக்­கடை சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­கரும் தூக்­கி­லிட்டு தண்­டிப்­பதைத் தடுத்து நிறுத்­து­மாறு கோரி­யுள்ள தடை உத்­த­ரவு வழக்கு ஒன்றும் இதில் அடங்கும். ஊட­க­வி­ய­லாளர் மலிந்த செனி­வி­ரட்ன தாக்கல் செய்­துள்ள இந்த ரிட் மனுவை விசா­ரிப்­ப­தற்­கென மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் ஐந்து பேர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் ஒன்றை நிய­மித்­துள்­ளது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.  

வர­லாறு

இலங்­கையின் மரண தண்­டனை நீண்ட வர­லாற்றைக் கொண்­டது. ஆங்­கி­லே­யர்கள் இலங்­கையைக் கைப்­பற்­றி­ய­தை­ய­டுத்து, அர­ச­னுக்கு எதி­ராக போர் புரி­ப­வர்­க­ளுக்கே தூக்குத் தண்­டனை என்ற கட்­டுப்­பாட்டைக் கொண்டு வந்­தார்கள். நாடு ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­தி­ர­ம­டைந்­த­தை­ய­டுத்து, 1956 ஆம் ஆண்டு பிர­த­ம­ராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க அந்தத் தண்­டனை முறை­மையை இல்­லாமல் செய்தார். 

ஆயினும் தூக்குத் தண்­ட­னையை இல்­லாமல் செய்த அவரே கொலை செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து மூன்று வரு­டங்­களின் பின்னர் அது மீண்டும் நடை­மு­றைக்கு வந்­தது. ஐக்கிய தேசிய கட்சி அர­சாங்கம் 1978 ஆம் ஆண்டு கொண்டு வந்த புதிய அர­சி­ய­ல­மைப்பில் தீவிர குற்றச் செயல்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட போதிலும், மரண தண்­டனை வழங்­கிய நீதி­பதி, சட்­டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகிய மூவரும் இணைந்து உறு­திப்­ப­டுத்­தினால் மட்­டுமே, தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்ற நியதி உரு­வாக்­கப்­பட்­டது. இந்த மூவரும் ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னிக்­கா­விட்டால் மரணதண்­டனை ஆயுள் தண்­ ட­னை­யாக மாற்­றப்­பட்டு குற்­ற­வாளி தண் ­டனை அனு­ப­விக்க வேண்டும் என்ற நடை­முறை கொண்டுவரப்­பட்­டது. இந்த வகையில் 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி இறு­தி­யாக தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. 

விடு­த­லைப் ­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்தம் 2009ஆம் ஆண்டு முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து சிறுவர் துஷ்­பி­ர­யோகம், பாலியல் வன்­பு­ணர்வு, கொலை, போதைப்­பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்கள் அதி­க­ரித்­த­தை­ய­டுத்து, தடை­யற்ற விதத்தில் தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­பட்டு அது பொது விவா­தத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. ஏற்­க­னவே தூக்குத் தண்­டனை நிறை­வேற்­று­வதை பாரா­ளு­மன்றம் ஏற்­றுக்­கொண்­டி­ருந்த நிலையில் 2018ஆம் ஆண்டு, போதைப் பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­கான உத்­த­ரவில் கையெ­ழுத்து இடு­வ­தற்குத் தயா­ராக இருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­தி­ருந்தார். இதன் தொடர்ச்­சி­யா­கவே நான்கு மரண தண்­டனை பெற்ற கைதி­களை தூக்கில் இடு­வ­தற்­கான உத்­த­ரவில் அவர் கையெ­ழுத்­திட்­டி­ருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ளார்.

போதைப்பொருள் குற்றச் செயல்­களில் நீதி­மன்­றத்­தால் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்ட 18 பேர் தூக்குத் தண்­ட­னைக்­கு­ரி­ய­வர்­க­ளாகத் தெரிவு செய்­யப்­பட்டு சட்­டமா அதி­ப­ரால் பெயர்ப்­பட்­டியல் ஒன்று ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­களில் 8 பேர் தமி­ழர்கள், 8 பேர் முஸ்­லிம்கள், 2 பேர் சிங்­க­ள­வர்கள் ஆவர். இவர்­களில் முதல் கட்­ட­மாக 2 சிங்­க­ள­வர்கள், ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் ஆகிய நான்கு பேருக்கே தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

போதைப்பொருள் குற்றச்செய­லுக்கு தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­படும் என்று கூறி­யுள்ள போதிலும், சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளிகள் ஜனா­தி­ப­தி­யா­கிய தனக்கு மேன்முறை­யீடு செய்ய முடியும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்ளார். ஆயினும் மேன்­மு­றை­யீட்­டை­ய­டுத்து, தண்­டனை பெறு­ப­வர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்­கப்­ப­டுமா அல்­லது தூக்குத் தண்­டனை தவிர்க்­கப்­பட்டு ஆயுள் தண்­ட­னை­யாக மாற்­றப்­ப­டுமா என்­பது பற்­றிய விப­ரத்தை அவர் வெளி­யி­ட­வில்லை.

தூக்கில் இடு­வது குற்றச் செயல்­களைக் குறைக்­குமா...?

ஆனால் தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்டால், அதன் எதிர்­வி­னை­யாக சர்­வ­தே­சத்­திடம் இருந்து பல்­வேறு பாதிப்­புகள் இலங்­கைக்கு ஏற்­படும் என்று விடுக்­கப்­பட்­டுள்ள எச்­ச­ரிக்­கையை இல­கு­வான விட­ய­மாகப் புறந்­தள்­ளி ­விட முடி­யாது.

தூக்குத் தண்­டனை நிறை­வேற்­ற­ப்ப­டு­மானால், போதைப்பொருள் குற்றச் செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக, யுஎன்­ஓ­டிசி எனப்­படும் ஐக்­கிய நாடு­களின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்­க­ளுக்­கான ஐ.நா. அலு­வ­ல­கத்தின் சர்­வ­தேச அள­வி­லான போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநி­யோகம் தொடர்­பி­லான குற்றச் செயல்கள் பற்­றிய தக­வல்­களைப் பரி­மாறிக் கொள்­வ­தற்­கான ஒத்­து­ழைப்­பையும் உத­வி­யையும் பெற முடி­யாத நிலைமை இலங்­கைக்கு உரு­வாகும். ஏனெனில் தூக்குத் தண்­ட­னையை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற நாடு­க­ளுடன் யுஎன்­ஓ­டிசி தொடர்­பு­க­ளையும் தக­வல்­க­ளையும் பரி­மா­றிக் ­கொள்­வ­தில்லை என்ற கொள்­கையை இறுக்­க­மாகக் கடைப்­பி­டித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும். இந்த நிலையில் ஐ.நா. போன்ற சர்வதேச வலையமைப்பையும் வலிமையையும் கொண்ட அமைப்பின் உதவியின்றி போதைப்பொருள் தொடர்பிலான குற்றச் செயல்களை இலங்கையினால் முடிவுக்குக் கொண்டு வர முடியுமா என்பது சந்தேகமே. 

அதேவேளை, குற்றவாளிகளைத் தூக் கில் இடுவதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்பது சர்வ தேசத்தினதும், துறைசார்ந்த நிபுணர்களி னதும் கருத்தாகும்.  இந்த நிலையில் தேர்தல் அரசியல் இலாபத்தைக் கருத்திற் கொண்டே போதைப் பொருள் குற்றத்துக்கான மரண தண்டனைக் கைதிகளைத் தண்டிப்பதற்காக தூக்கிலிடுவதை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தீர்மானித்து, அதில் பிடி வாதமாக இருப்பதாகக் கருதப்படுகின்றது. 

போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கொள்கை ரீதியில் ஆதரிப்பவர்களே தூக்குத் தண்டனை உத்தரவை எதிர்க்கின்றார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை, ஜி.எஸ்.பி. வரிச்சலுகை வழங்கப்பட மாட் டாது என்று அச்சுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு இலங்கையின் இறைமைக்குள் தலையீடு செய்கின்ற நடவடிக்கையாகும் என்றும் சாடியுள்ளார். 

நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து, இனங்களுக்கிடையில் குரோதத்தையும் பகை உணர்வையும் ஊட்டுகின்ற பல செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டி ருக்கின்ற ஒரு சூழலில் போதைப்பொருள் குற்றத்துக்கான மரணதண்டனைக் கைதிக ளைத் தூக்கிலிட்டுத் தண்டிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் பிடிவாதச் செயற்பாடு சர்வதேச மற்றும் உள்ளக அரசியல் நிலை மைகளில் பெரும் பாதிப்பையே ஏற்படுத் தும் என்பதில் சந்தேகமில்லை. 

தேர்தல் ஒன்றை எதிர்கொண்டுள்ள நிலை யில், அவருடைய அரசியல் எதிர்காலம் குறித்த நிலைமைகளிலும், தூக்குத் தண் டனை விவகாரம் செல்வாக்கு செலுத்து வதாகவே அமையும் என்பதிலும் சந்தேக மில்லை.  

பி.மாணிக்­க­வா­சகம்