(நா.தினுஷா)

அமெரிக்காவுடனான  மூன்று ஒப்பந்தங்களையும் மையமாக  கொண்டு எதிரணயினர் அரசியல் இலாபம் காணவே முயற்சிக்கிறார்கள். இந்த ஒப்பந்தங்களால்  எமக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்றும்  மிலேனியம் சவால்கள்  கூட்டு ஒப்பந்தத்தினூடாக 680 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

அலரிமாளிகையில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் , இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்  சம்பவங்களை  தொடரந்து  சிலர்  நாட்டின் இனவாத கருத்துக்களை தோற்று வித்து குழப்ப நிலையை தோற்றுவிக்க முயற்சித்தனர்.

 ஆனால் அது அவர்களின்  எதிர்பாரப்புக்கு பலனளிக்கவில்லை. இந்நிலையில்  தற்போது  அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை எதிரணியினர் முன்வைத்து வருகின்றனர்.  

1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்திலேயே படைகளின் அந்தஸ்து (சோபா) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.  இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க இதுவரையில்  அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து கலந்துரையாடல்கள் மாத்திரமே தற்போது  இடம்பெற்று வருகின்றது.  

அதனை அடுத்து  2007 ஆம் ஆண்டு  கோத்தபாய ராஜபக்ஷவினால்  எக்ஷா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.  இந்த ஒப்பந்தத்துக்கான 10 வருட காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த மீள் பரிசீலனை நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்று வருகிறது. கால எல்லை நிவைடைந்து  180 நாட்டுகளுக்குள்  இந்த ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை விலகி கொள்ள கூடிய வகையிலான புதிய ஏற்பாடொன்றும்  கொண்டுவரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.