(நா.தனுஜா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மரணதண்டனைக் கைதிகள் 20 பேரின் விபரங்கள் அனுப்பிவைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளியாக இனங்காணப்பட்ட திகதி மற்றும் வழக்கு இலக்கம் என்பவற்றை வழங்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டிருக்கிறது.

உடனடி ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் இந்நாட்டுப் பிரஜைகளைக் கருத்திற்கொண்டு விரைவான பதிலை எதிர்பார்த்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினாலும், ஊடகவியலாளர் மலிந்த செனெவிரத்னவினாலும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட தகவல் கோரல் விண்ணப்பத்தை அடுத்தே ஆணைக்குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

 எனினும் சில கைதிகள் தமது விபரங்கள் வெளியிடப்படுவதை விரும்ப மாட்டார்கள் என்பதால், அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே அவற்றை வெளியிட முடியும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.