(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர்  ஆகியோரே பொறுப்பு கூற வேண்டும். ஆனால்  பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீது பழி சுமத்திவிட்டு தமது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர் என்று ஜே.வி.பி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார். 

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களின் பின்னர் நாட்டில் உருவாகியுள்ள அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளைக் இல்லாதொழிப்பதற்கு ஜே.பி.வி முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சுமத்தினார். 

தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் தெரிவித்ததாவது : 

நாட்டில் அடிப்படைவாத, பயங்கரவாத செயற்பாடுகளினால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே நாட்டில் இனவாத்தையும், அடிப்படைவாதத்தையும் தோல்வியடையச் செய்து அனைவரும் ஒரே நாடு ஒரே நீதி என்ற அடிப்படையில் வாழ வேண்டும். இது தொடர்பில் ஜே.பி.வியால் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

ஒரே நாடு ஒரே நீதி என்ற அடிப்படையில் நாடு முன்னேறிச் செல்வதற்கு பொது நீதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அது மாத்திரமின்றி கல்வித்துறையிலும் பாரிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இவை அனைத்திற்கும் மதத் தலைவர்களின் ஆதரவு அத்தியாவசியமானதாகும். எனவே தான் எமது யோசனைகளை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களிடம் தெளிவுபடுத்துவதற்காக அவர்களை சந்தித்தோம் என அவர் தெரிவித்தார்.