போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பிரச்சாரத்தின் காரணமாக தான் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், உளவுத்துறை அதிகாரிகளால் இந்த அச்சுறுத்தல்கள் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பிரச்சாரத்தை தன் முன்னெடுத்து வருவதால் என்னை அழிக்கவும் பலவீனப்படுத்தவும் சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.

இந்த சதித் திட்டங்களுக்குப் பின்னால் போதைப்பொருள் கட்த்தல் காரர்கள் உள்ளனர், இதற்காக அவர்கள் நிறைய பணம் செலவிடுகிறார்கள். போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன, 

மேலும் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தை பலவீனப்படுத்த ஏராளமானோர் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள் என்றும் அவர் கூறினார், மேலும் அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எனக்கு எதிராக செயற்படுகின்றன.

நான் யாரையும் பாதுகாக்க ஆட்சிக்கு வரவில்லை. ஊழல், மோசடி மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்.

அத்துடன் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் பொலன்னறுவை, ஸ்ரீபுர மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

காணி உறுதி வழங்குதலை அடையாளப்படுத்தும் முகமாக சில குடியேற்றவாசிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் இதன்போது காணி உறுதிகளை வழங்கினார். இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, அனோமா கமகே, இசுர தேவப்பிரிய, சாமர சம்பத் தசநாயக்க, பீ.தயாரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.