(நா.தனுஜா)

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நான்கு கைதிகளுக்கு மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கான அனுமதியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளமையை எதிர்த்து, மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.

மரணதண்டனை என்பது மிகவும் குரூரமானதும், மனிதாபிமானமற்றதுமான தண்டனை முறை என்பதுடன், அது பல்வகை மதங்களைக் கொண்ட ஒரு முற்போக்கான சமூகத்திற்குப் பொருத்தமானதல்ல என்பதே எமது நிலைப்பாடாகும். குற்றவாளிகளுக்கு மரணதண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டாலும் கூட, கடந்த 43 வருடகாலமாக எந்தவொரு கைதிக்கும் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தற்போது மரணதண்டனையை அமுல்படுத்துவதென்பது 11 ஆவது சரத்தின்படி அடிப்படை மனிதஉரிமைகளை மீறுவதாக அமையும் என்பதுடன், 12 ஆவது சரத்தின் முதலாவது உப உறுப்புரையின்படி சட்டம் அனைவருக்கும் பொதுவானது, அதன்கீழ் அனைவரும் சமஅளவில் பாதுகாப்புப்பெற உரித்துடையவர்கள் என்ற கோட்பாட்டையும் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.