(எம்.மனோசித்ரா)

மரண தண்டனை என்பது ஒரு புதிய விடயம் இல்லை.அது இலங்கையின் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமாகும். இப்போது மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 1989 ஆம் ஆண்டு நாட்டில் மரண தண்டனை வேண்டாம் என்ற சர்வதேச ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்திடவில்லை என்று கூற வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்ததாவது,

ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ என்று முன்னைய  எந்த ஜனாதிபதியும் மரண தண்டனையைப் பயன்படுத்தவில்லை. 

அந்த காலங்களில் போதைப் பொருள் பாரியதொரு பிரச்சினையாகக் காணப்படவுமில்லை. ஆனால் இன்று போதைப் பொருள் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனை நிச்சமாக வழங்கப்பட வேண்டும். 

போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியமைக்கு எதிர்ப்பை தெரிவிப்பவர்கள், போதைப் பொருளுக்கு அடிமையாகி இறந்த நூற்றுக்கணக்கானவர்கள் குறித்து சிந்திக்கவில்லை. இவ்வாறு நூற்றுக்கணக்கான உயிர்கள் அநியாயமாக பலியாவதற்கு பதிலாக அந்த மரணங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் கொல்லப்படுவதில் தவறில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.