மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று செவ்வாய்க்கிழமை காலை முப்படையினரின் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் இடம் பெற்றது.

மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று  6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மாணுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கடந்த 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து  மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவிற்கான நவ நாள் திருப்பலிகள் இடம் பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் வேஸ்பர் ஆராதணை வழிபாடுகள் இம் பெற்றது.

அதனை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணியளவில்  திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மாணுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் கலாநிதி அன்ரனி ஜெயகொடி இணைந்து கூட்டுத்திருப்பலியாக திருவிழா திருப்பலியை  ஒப்புக் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து திருச் சொரூப பவணியும்,ஆசியும் வழங்கப்பட்டது.

மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், திணைக்கள தலைவர்கள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் உள்ளடங்களாக நாட்டில் இருந்து சுமார் ஒரு இலட்சம் வரையிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதகாப்பை கருத்தில் கொண்டு இராணுவம்,பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.