தேசிய பாடசாலைகளின் முன்னோடி செயற்திட்டமாக மாத்திரமே உயர்தர மாணவர்களுக்கான டெப்  கணனிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

Image may contain: 1 person

நாட்டிலுள்ள சகல உயர்தர பாடசாலை மாணவர்களுக்கும் டெப் கணனிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆலோசனை 2017ஆம் ஆண்டிலேயே அமைச்சரவையில் முதன்முதலாக சமர்ப்பிக்கப்பட்டது. 

கல்வி அமைச்சின் ஊடாக முன்வைக்கப்பட்ட இந்த ஆலோசனைக்கு நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் இதனை ஆரம்பிப்பது பொருத்தமற்றது எனவும் முதற்கட்டமாக அதனை ஒரு சில தேசிய பாடசாலைகளில் மாத்திரம் முன்னோடி செயற்திட்டமாக ஆரம்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி சிபரிசு செய்யப்பட்டது. 

குறிப்பாக அத்தியாவசிய பாட விதானத்திற்குரிய விடயங்கள் தவிர்ந்த ஏனைய இணையத்தளங்களுக்கு இந்த டெப் கணனிகளின் ஊடாக பிரவேசிப்பது தடை செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருந்தார்.

 அதற்கமைய கல்வி செயற்பாடுகளுக்கு மேலதிகமாக வேறு விடயங்களுக்கு பிரவேசிக்கும் ஆற்றல் தடுக்கப்பட்டு இந்த டெப் கணனிகளை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. 

இந்த முன்னோடி செயற்திட்டத்தின் வெற்றிக்கமைய அதன் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இத்தகைய செயற்திட்டங்கள் தேசிய பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதே குறித்த ஆலோசனை பற்றிய அமைச்சரவையின் சிபாரிசாகவும் அமைந்தது.

நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணனிகளை வழங்குவதற்காக ஐந்தரை பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் குறித்த செயற்திட்டத்திற்கான செலவின் பின்னரான மிகுதியை நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் பாரிய குறைபாடாக நிலவிவரும் மேசை, கதிரைகள் உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுக்கொடுக்க பயன்படுத்த வேண்டுமென்பதே இச்செயற்திட்டம் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசனையாக அமைந்தது. 

மேலும் இச்செயற்திட்டத்திற்கான நிதி தேவைப்பாடு எவ்வளவு என்பதையும் உறுதியாக குறிப்பிட வேண்டுமென்பதும் ஜனாதிபதியின் பணிப்புரையாக அமைந்தது. இதற்கமைய குறித்த செயற்திட்டத்திற்காக 2017ஆம் ஆண்டில் கோரப்பட்ட விலைமனு முன்னோடி செயற்திட்டத்திற்கமைய மாற்றியமைக்கப்படல் வேண்டும். 

பாடசாலை மாணவர்களுக்கு புதிய தொழிநுட்பத்துடனான அறிவினை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமான போதிலும் அதனை மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் உளவியல் நிலைமைகளுக்கு பொருத்தமான வகையில் இச்செயற்திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும்