(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை தொடர்ந்து 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பது நியாயமாக அமையாது என சி.ஐ.டி. பாதுகாப்பு செயலாளர் ஜெனரால் ஷாந்த கோடேகொடவுக்கு அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இன்று பாதுகாப்பு செயலருக்கு குற்றப் புலனயவுப் பிரிவின் பனிப்பாளர் ஊடாக அறிவிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நான்காம் மாடி தகவல்கள் வெளிப்படுத்தின. 

ஏற்கனவே  ஷாபி வைத்தியருக்கு எதிராக சுமத்தப்படும் பயங்கரவாத, அடிப்படைவாத  குற்றச்சாட்டுக்களுக்கோ சொத்துக் குவிப்பு மற்றும் கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களுக்கோ எந்த சாட்சிகளும் இல்லை என  சி.ஐ.டி. குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

எனினும்  கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வைத்தியர் ஷாபி  சி.ஐ.டி.  தடுப்பில் இருந்து வருகின்றார். இந் நிலையிலேயே அவரது தடுப்புக் காவல் நியாயமற்றது என அறிவிக்க சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.