(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பதே லங்கா சமசமாஜக் கட்சியின் எதிர்பார்ப்பாகும் என அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் இலங்கையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் தாக்கம் செலுத்தும். இதில் காணப்படும் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும் தேர்தல் பிரசாரங்களின் போது பாதகமான நிலைமையையே தோற்றுவிக்கும். மக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய ராஜபக்ஷவே நியமிக்கப்படுவார் என்று எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் இந்நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் லங்கா சமசமாஜக் கட்சியின் நிலைப்பாட்டை வினவிய  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.