(செ.தேன்மொழி)

வென்னப்புவ - சிரிகம்பல பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிரிகம்பல பகுதியில் நேற்று சனிக்கிழமை வென்னப்புவ மற்றும் தங்கொடுவ பொலிஸார்  இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மேலும், சிரிகம்பல -  லுனுவில பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது கைது செய்யப்பட்ட  26 வயதுடைய பெண்ணிடமிருந்து 3 கிராம் 550 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரான 34 வயதுடையவரிடமிருந்து 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 ஆவது சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோத மதுபான வடித்தலுக்கு பயன்படுத்தும் 1890 லீட்டர் கோடாக்களும் (5 பீப்பாய்கள்) , செப்பு தகரம் ஒன்றும் மீட்டகப்பட்டுள்ளதுடன், இவர் 35 வயதுடையவர் என  பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை மாரவில நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதுடையவரான சந்தேக நபருக்கு எதிராக மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.