கிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில்  கடற்றொழிலாளர்களின் வலையில் புள்ளி சுறா சிக்கியது. இதையடுத்து குறித்த கடற்றொழிலாளி கைது செய்யப்பட்டு நான்கு ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

அத்தோடு அவரின் 13 இலட்சம் பெறுமதியான படகு, மற்றும் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் என்பன கடற்படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறித்த கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வழமைபோன்று  தொழில் நடவடிக்கைகளுக்காக நேற்று இரவு சனிக்கிழமை வலை விரித்து விட்டு வந்த பின்னர் அதிகாலை சென்று வலையை இழுத்த போது சுமார் 1200 கிலோ கிராம் புள்ளி சுறா சிக்கியுள்ளது.  இது தடை செய்யப்பட்ட மீனினம் என்று எங்களுக்குத் தெரியாது. இதுவரைக்கும் நீரியல் வளத் திணைக்களம்  கடற்றொழிலாளர்களுக்கு இவ்வகை சுறா மீன் தடைசெய்யப்பட்டது என்று எந்த தகவலையும் தரவில்லை.  எங்களைப்  பொறுத்தவரை ஆமை, கடற்பன்றி, டொல்பின், திமிங்கிலம், ஓங்கில்  போன்ற கடற்வாழ் உயிரினங்களைப் பிடிக்க முடியாது என்று தெரியும். எனத் தெரிவித்த குறித்த பிரதேச கடற்றொழிலாளர்கள்

15 அடி ஆழமான இந்த கடற்பரப்பில் இவ்வகை சுறா மீன்கள் வருவது கிடையாது.  அதற்கான சாத்தியம் இல்லை இந்த சுறா மீன் ஏற்கனவே பாதிக்கப்பட்டு, அல்லது  கப்பல்களில் தாக்கப்பட்டுக் கரையொதுங்கிய போது எங்களது சாதாரண வலையில் சிக்கியிருக்கிறது. 

இது வழமை போன்று ஆரோக்கியமாகக் காணப்பட்டிருக்குமானால் எங்களது படகு மற்றும் வலை என்பவற்றுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கும். எனவே  ஆரோக்கியமற்ற நிலையில் கரையொதுங்கிய போதே எமது வலையில் சிக்கியிருக்கிறது. எனத் தெரிவித்த கடற்றொழிலாளர்கள்

 இதற்காக அதிகாரிகள் எங்களது கடற்றொழிலாளர்களை கைது செய்து அவர்களை நீதிமன்றில் முற்படுத்தி தற்போது  நீதி மன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. அத்தோடு 13 இலட்சம் பெறுமதியான படகு இயந்திரங்கள் என்பன கடற்படையின் கட்டுப்பாட்டில்  உள்ளன.  ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை அதிகாரிகள் கையகப்படுத்தியிருக்கின்றார்கள் எனக் கவலை  தெரிவித்த கடற்றொழிலாளர்கள்,  தானாக வலையில் சிக்கிய மீனுக்காகத் தண்டனைகளை அனுபவிப்பதோடு,  தொழில் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர்.

வலையில் சிக்கிய புள்ளி சுறா தற்போது கடற்கரை  பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.