(ப. பன்னீர்செல்வம், ஆர். ராம்)

பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த சபாநாயகர் கருஜெயசூரிய.  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் சபாநாயகர் தனது அறிவிப்பில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் மே மாதத்தின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை  சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியதோடு அதன் பின்னர் பாராளுமன்றத்திற்குள் இடம்பெற்ற கூச்சல் குழப்பம் மோதல்களையடுத்து சபை 1.35 க்கு இடை நிறுத்தப்பட்டு மீண்டும் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானதோடு இதன்போது  சபாநாயகர் சபைக்கு விசேட அறிக்கையொன்று விடுத்தார். 

இதன்போதே மேற்கண்டவாறு சபாநாயகர் தெரிவித்தார்.

சபாநாயகர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்;

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் மக்கள் மகஜர்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பி. யுமான மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு தொடர்பாக தினேஷ் குணவர்தன எம்.பி.யினால் எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பில் பிரதமர் சபையில் தெளிவான பதிலலை வழங்கினார்.

அத்தோடு பாதுகாப்பு விடயம் தொடர்பில் நன்கு தெரிந்த அமைச்சர் பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா மேலதிக விபரங்களை தெரிவிப்பாரென்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதன் பின்னர் அமைச்சர் சரத் பொன்சேகா தனது உரையை ஆரம்பித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. 

இறுதியில் எம்.பி. க்கள் ஒருவருக்கொருவர் எதிராக தாக்கும் நிலைக்கு இந்த அமைதியின்மை தலைதூக்கியது.

இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இச் சந்தர்ப்பத்தில் சபை நடவடிக்கைகளை தற்காலிகமாக இடை நிறுத்தி கட்சித் தலைவர்களை கூட்டி விசேட கூட்டமொன்றை நடத்தினோம்.

இதில் கலந்து கொண்ட எம். பி.க்கள் இச்சம்பவத்திற்கு தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.

இதன் பின்னர் இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பிரதி சபாநாயகர்கள் மற்றும் குழுக்களின் பிரதிநிதி தலைவர் தலைமையில் குழுவொன்றை நியமித்தேன்.

உடனடியாக இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துள்ளேன்.

இவ் அறிக்கை கிடைத்ததும் இச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்படும் எம்.பி. க்கள் தொடர்பில் தெளிவான தீர்மானம் எடுக்கப்படும்.

எம்.பி. க்களுக்கான ஒழுக்கக் கோவை தயாரிப்பது தொடர்பில் நான் இச்சபையில் அறிவித்தேன்.

இச்சம்பவம் இடம்பெற்ற இன்றைய  தினத்தில் மக்கள் கலரியில் பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் பெருமளவில் காணப்பட்டனர்.

இந்நிலையில் இச்சம்பவம் பாராளுமன்றத்தின் கௌரவத்திற்கு இழுக்கினை ஏற்படுத்தியுள்ளது.

இச்  சம்பவத்தால் எம்.பி. க்கள் பலருக்கு காயமேற்பட்டுள்ளதோடு  எம்.பி.யொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறனதோர் சூழ்நிலையில் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்வது உசிதமானதல்ல என நான் தீர்மானிப்பதோடு அதன் அடிப்படையில் அடுத்த தினம் வரை பாராளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

சபாநாயகரின் இந்த அறிவிப்பின் பின்னர் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல சபை நடவடிக்கைகளை நாளை புதன்கிழமை  நண்பகல் 1.00 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.