(எம்.சி.நஜிமுதீன்)

நாட்டில் இன்று இரு பெரும்பான்மைக் கட்சிகளும் இணைந்து ஆட்சி நடத்துகின்றன. அதில் நாமும் அங்கம் வகிக்கிறோம். எனினும் இரு பெரும்பான்மைக் கட்சிகளினதும் இணைப்பு சில வேளைகளில் சிறுபான்மையினரை நசுக்குவதிலும் ஆர்வம் காட்டலாம். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி பரிபூரண ஆதரவை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே எமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சிறுபான்மையினரின் பிரதிநித்துவத்தை பாதிக்கும் வடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்த தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பிலான செயலமர்வு இன்று மாலை கொழும்பிலுள்ள விளையாட்டமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்மேலும் குறிப்பிடுகையில்,

ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தால் பல முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டள்ளன. ஜனாதிபதி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறார். அதன் பிரகாரம் உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பபடுகிறது.  அத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு விடயமும் முக்கியத்துவம் வகிக்கிறது. எனவே அறிமுகப்படுத்தப்பட

வுள்ள புதிய தேர்தல் முறையானது எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

எனினும் ஒரு விடயத்தை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு மாற்றமும் வடக்கு கிழக்கைப் பெரிதாகப் பாதிக்கப்போவதில்லை. 

வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் சிறுபான்மையினரைத்தான் பாதிக்கப்போகிறது. வடக்கு, கிழக்கிற்கு வெளியில் ஐம்பது சதவீதமான தமிழ் மக்கள் சிதறி வாழ்கின்றனர். முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்கின்றனர். ஆகவே அம்மக்களின் விடயத்தில் நாம் அவதானமாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.