எமது உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை நான் தடுக்கச் சென்றேன். இதன்போது பியால் நிசாந்த மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் என் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் சரத் பொன்சேகா உரையாற்றி கொண்டிருக்கும் போது எதிரணியினர் சிலர் கூச்சலிட்டு குழப்பம் விளைவித்தனர்.

இதன்பின்னர் சந்தித் சமரசிங்க எம்.பி.யை சில பாராளுமன்ற உறுப்பினர் நிலத்தில் தள்ளி தாக்கியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பலர்  சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தித் சமரசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

என்னை நிசாந்த மற்றும் பிரசன்ன ரணவீர  ஆகியோரே தாக்கினர். ஜனநாயகம் என்பது பாராளுமன்றத்தில் இல்லாமல் போயுள்ளது. நாங்கள் நல்லாட்சியை கொண்டு வந்தது இவ்வாறான விடயங்களை எதிர்ப்பார்த்து அல்ல. அனைவரும் சமாதானமாக வாழவேண்டும் என்பதே எமது நோக்கமாகும். 

கடந்த காலங்களைப் போன்று இன்னும் கொலையாளிகள் கூட்டம் மறைந்து செயற்படுகின்றது என்றார்.