கோப்பியோ ஸ்ரீலங்கா அமைப்பானது, பின்தங்கிய நிலையிலுள்ள இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பிரதேசங்களில் பல்வேறு அறிய பல பணிகளை புரிந்து வருகிறது. குறிப்பாக கல்வியை அபிவிருத்தி செய்வதன் மூலமே சமூகம் எழுச்சிப் பெறமுடியும் என அசையா நம்பிக்கை கொண்டு தொடர்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் கடந்த வருடம் சப்பிரகமுவ மாகாணத்தில் கல்வியில் பின்னடைவான பிரதேசங்களை இனங்கண்டு பின்வரும் நான்கு முக்கியப் பணிகளை மேற்கொண்டது.

01. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகள்.

02. க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச தொடர் கருத்தரங்குகள்.

03. மாணவர்களுக்கான மற்றும் இளைஞர்களுக்கான எதிர்காலத் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள்.

04. பெற்றோர், மாணவர் மற்றும் பழைய மாணவர்களுக்கான கல்வியில் எழுச்சி பெறும் விழிப்புணர்வு கூட்டங்கள்.

கோப்பியோ அமைப்பினால் நடாத்தப்பட்ட மேற்குறித்த கருத்தரங்குகளும் கூட்டங்களும் நல்ல பல பலன்களைத் தந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகலை கல்வி வலயத்தில் 11 பாடசாலை மாணவர்களை இணைத்து மேற்கொள்ளப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் இலவசத் தொடர் கருத்தரங்குகளினால் முன்னைய வருடங்களிலும் பார்க்க பல மடங்கு முன்னேற்றகரமான பெறுபேறுகள் கிடைத்தன.

அதேவேளை, நிவித்திகலை கல்வி வலயத்தில் நான்கு பாடசாலைகளை இணைத்து க.பொ.த (சா) தர மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இலவச தொடர் கருத்தரங்குகளினால் சிறந்த பெறுபேறுகள் கிடைத்தன. முன்னைய ஆண்டு பெறும் 08% மாணவர்கள் மாத்திரமே சித்தியடைந்த நிலைமாறி இம்முறை 61% மாணவர்கள் சித்தியடைய இக்கருத்தரங்குகள் பெரிதும் துணைபுரிந்தன.

இதனை முன் உதாரணமாகக் கொண்டு இந்த வருடம் மிகவும் தேவைப்படும் இரு கல்வி வலயங்களில் க.பொ.த.(சா) தர மாணவர்களுக்கான இலவசத் தொடர் கருத்தரங்குகளை நடாத்த கோப்பியோ ஸ்ரீலங்கா அமைப்பு எண்ணியுள்ளது.

01. மேல் மாகாணம் கொழும்பு மாவட்டம் ஹோமாகமை கல்வி வலயத்தைச் சேர்ந்த புவக்பிட்டிய சீ.சீ தமிழ் மகா வித்தியாலயத்தில் அதனை சூழவுள்ள 4 பாடசாலைகளை இணைத்து தொடர் கருத்தரங்குகளை நடாத்துதல்.

02. சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகலை கல்வி வலயத்தில் டேலை தமிழ் மகா வித்தியாலயத்தில் அதனைச் சூழவுள்ள 4 பாடசாலைகளை இணைத்து தொடர் கருத்தரங்குகளை நடாத்த உத்தேசித்துள்ளது.

இத்தொடர் கருத்தரங்குகளுக்கான ஆரம்ப நிகழ்வுகள் ஜுன் மாதம் 30 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு கொ/ஹோ/புவக்பிட்டிய சீ.சீ, தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறும்.