உள்நாட்டுப் போரினால் சின்னாபின்னமாகியிருக்கும் லிபியாவில் புது உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதை நோக்கிய சமாதான முன்முயற்சியொன்றை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட அந்நாட்டின் அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் வரவேற்கப்படக்கூடிய ஒரு நகர்வாகும். திரிபோலியை தளமாகக் கொண்டிருக்கும் பிரதமர் பாயிஸ் அல்-சாரஜின் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் தேசிய சமாதான சபையொன்றை அமைப்பதற்கும், அதைத் தொடர்ந்து ஏக காலத்தில் ஜனாதிபதித் தேர்தலையும், பாராளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கான யோசனையை முன்வைத்திருக்கிறது.
தலைநகரின் புறநகர் பகுதிகளில் திரிபோலி அரசாங்க துருப்புகளுடன் போர்த்தலைவர் காலிபா ஹப்தாரின் கிளர்ச்சி இராணுவம் கடுமையான சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் அல்-சாரஜ் ஒரு சமாதானத் திட்டத்தை முன்வைத்திருக்கிறார். ஆனால் அத்தகைய சமாதானத் திட்டமொன்றை முன்வைப்பதன் மூலம் மாத்திரம் சிக்கலானதும், போரினால் சிதறுண்டதுமான லிபியாவின் அரசியல் சமுதாயத்தில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது.
1911 ஆம் ஆண்டில் சர்வாதிகாரி கேர்ணல் மும்மர் கடாபிக்கு எதிராக மூண்ட ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு அந்த நாடு குழப்பநிலைக்குள் மூழ்கியிருக்கிறது. வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமைப்பின் (நேட்டோ) ஆக்கிரமிப்பு கடாபியை பதவி கவிழ்க்க உதவியது. ஆனால் நான்கு தசாப்தங்களாக அதிகாரித்திலிருந்த கடாபியின் ஆட்சியினால் விட்டுச்செல்லப்பட்ட வெற்றிடத்தை வல்லாதிக்க வெளிநாடுகளினாலோ அல்லது அவற்றின் உள்ளுர் நேச அணிகளினாNலூ நிரப்ப இயலாமல் போய்விட்டது.
இப்பொழுது லிபியாவில் இரண்டு அரசாங்கங்கள் இயங்குகின்றன. ஒரு அரசாங்கம் எகிப்துடனான எல்லைக்கு அண்மையாக லிபியாவின் கிழக்கு மத்திய தரைக்கடல் மூலமாக அமைந்திருக்கும் துறைமுக நகரான ரொப்ருக்கை தளமாகக் கொண்டிருக்கிறது. மற்றைய அரசாங்கம் தலைநகர் திரிபோலியில் இயங்குகிறது. ஹப்தாரின் தலைமையிலான லிபிய தேசிய இராணுவம் என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்ட படை ரொப்ருக் அரசாங்கத்தை ஆதரிக்கிறது. அது பரந்தளவு பிராந்தியங்களைக் கைப்பற்றி வைத்திருக்கும் அதேவேளை சர்வதேசத்தின் அங்கீகாரத்தைக் கொண்ட திரிபோலி அரசாங்கத்தை இஸ்லாமியக் குழுக்கள் உட்பட பெருவாரியான திரட்டற்படைகள் பாதுகாக்கின்றன. பயங்கரவாதக் கழுக்களை எதிர்த்துச் சண்டையிடுவதாகக் கூறிக்கொள்ளும் ஹப்தார் தனது தலைமையின் கீ; லிபியாவை ஐக்கியப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். அதேவேளை அல்-சாரஜ் தனது அரசாங்கமே சட்டபூர்வமானது என்று உரிமை கோருகிறார்.
அல்-சாரஜின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் ஹப்தார் தனது துருப்புக்களை நகர்த்தியதை அடுத்தே தற்போதைய நெருக்கடி மூண்டது. ஆனால் மற்றைய சண்டைகளை விட வேறுபட்ட வகையில் ஹப்தாரின் படைகள் லிபியாவின் கிழக்கிலும், தெற்கிலும் சண்டையிட்டன. அதேவேளை அவரின் படைகள் அரசாங்கத்துக்கு விசுவாசமான படைகளினால் திரிபோலியின் புறநகர் பகுதிகளில் முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டன.
நூற்றுக்கணக்கான மக்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர். ஆனால் சர்வதேச சமூகம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் யுத்த நிறுத்தமொன்றுக்கு இணங்குவதற்கு இரு தரப்பினரும் மறுத்துவிட்டனர். லிபிய நெருக்கடியில் பிராந்திய சக்திகளின் செல்வாக்கும், ஆற்றலும் ஒரு பாத்திரத்தை வகிக்கிறது. எகிப்து, சவுதிஅரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை ஹப்தாரின் படைகளை ஆதரிக்கும் அதேவேளை துருக்கியும், கட்டாரும் திரிபோலி அரசாங்கத்தை ஆதரிக்கின்றன. திரிபோலி மீதான தாக்குதலை ஹப்தார் தொடங்கிய போது அமெரிக்காவும் அவருக்கு அனுகூலமானதொரு நிலைப்பாட்டையே எடுத்தது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹப்தாருடன் தொலைபேசியில் பேசினார்.
ஆட்சி மாற்றத்துக்காக முன்னெடுக்கப்பட்ட போர்கள் ஒரு நாட்டுக்கு எத்தகைய விளைவுகளைக் கொண்டுவரும் என்பதற்கு லிபியா ஒரு பிரகாசமான உதாரணமாகும். ஈராக் மற்றும் லிபியா உதாரணங்கள் வெளிக்காட்டுவதைப் போன்று படைப்பலத்தைப் பயன்படுத்தி ஆட்சிமாற்றம் செய்வது சுலபமானதாக இருக்கக்கூடும். ஆனால் புதிய அரசொன்றைக் கட்டியெழுப்புவது சுலபமானதல்ல. அதுவும் இராணுவ வல்லமைப்பின் உதவியுடன் புதிய அரசைக் கட்டியெழுப்ப முடியாது.
எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த வடஆபிரிக்கா நாட்டை ஆக்கிரமித்த சகல நாடுகளும் (அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவற்றில் வளைகுடா நேச நாடுகள் உட்பட) லிபியாவின் இன்றைய நெருக்கடிக்கான பொறுப்பை ஓரளவு ஏற்றேயாக வேண்டும். அந்த நாடுகள் இப்போதாவது தங்களது குறுகிய புவிசார் அரசியல் நலன்களுக்கு அப்பால் சிந்தித்து, போரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட திரட்டல் படைகளைக் கட்டுப்படுத்தி நாட்டில் ஒழுங்கை நிலைநாட்ட தங்களது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும். யுத்த நிறுத்தமொன்று ஏற்படுத்தப்பட்டு, அது நெருக்கடியில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரைளும் மதித்துக் கடைப்பிடிக்கப்பட்டால் மாத்திரமே பிரதமர் அல்-சாரஜின் சமாதான யோசனைத்திட்டம் ஒரு புதிய தொடக்கமாக இருக்க முடியும்.
(த இந்து)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM