(ஆர்.விதுஷா)

மக்கள் ஒருபோதும் இனவாதத்தை  விரும்புவதில்லை ,மாறாக அரசியல் வாதிகளே மக்கள்  மத்தியில் இனவாதத்தை தூண்டுகின்றனர். 

இனவாதசெயற்பாடுகளினாலேயே  நாட்டின்  அபிவிருத்தி ,பொருளாதார வீழ்ச்சிகள் ஏற்படுகின்றன. அரசியல்வாதிகளின்  இனவாத கருத்துக்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்க கூடாது  என்று சுகாதார ,சுதேச  மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார். 

சிவில்  சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தால்   வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு  மண்டபத்தில் 'தீவிரவாதம்  வேண்டாம் , ஜனநாயகத்தைப்பாதுகாப்போம்' எனும்  தொனிப்பொருளில்    ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள்  சந்திப்பின் போது  உரையாற்றுகையிலேயே  அவர்  இவ்வாறு  தெரிவித்தார்.  

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரகளான ரவூப்ஹக்கீம் , முஜிபர்  ரஹூமான் ,பேராசிரியர் தமிர அமில  தேரர் ,முனீர்  முலாபர்  மௌலவி  , சிவில் அமைப்புக்களின்  சமூக  செயற்பாட்டாளர்  சமன்  ரத்ன  பிரிய , உள்ளிட்ட பலரும் ஜனநாயகத்தை  பாதுகாப்பதற்காக  நாட்டு மக்கள் அனைவரும்  ஒன்றிணைய  வேண்டும் என்ற  கருத்தை  தெரிவித்தனர்.  

இதேவேளை  நாட்டின்  அனைத்து பாகங்களிலிருந்தும் வருகை  தந்த  பெருமளவான மக்களும் தீவிரவாதத்தை  இல்லாதொழித்து  ஜனநாயகத்தை  பாதுகாப்பதற்காக அணிதிரண்டிருந்தனர்;.

அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து கூறியதாவது  ,

நாடு  தற்போது  பயங்கரவாத நிலையை  சந்தித்துள்ளது  அதனை  முறியடித்து  ஜனநாயகத்தை   நிலைநாட்டுவதற்காகவே   நாம்  அனைவரும்  ஒன்றிணைந்துள்ளோம். இந்த நாட்டு  மக்கள்  இனவாதிகள்  அல்ல.  மாறாக  அரசியல்  வாதிகளே  இனவாதத்துடன்  செயற்படுகின்றனர்.  

ஆகவே  தான் நாடு இத்தகைய பயங்கரவாத ஆபத்தை  சந்திக்க  நேரிட்டுள்ளது.  

இத்தகைய  அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால்  நாடு  பொருளாதார  ரீதியிலும்   பின்னடைவை  சந்தித்துள்ளது.  எமது நாட்டிற்கு  பின்னர்  தோற்றம் பெற்ற  நாடுகளை  விடவும்  பின்தங்கிய  நிலைக்கு   எமது  நாடு   தள்ளப்பட்டுள்ளது.

இது  வெட்கப்பட வேண்டிய விடயமாகுமாகும் என அவர் இதன் போது தெரிவித்தார்.