நாட்டின் கல்வித் திட்டம் தொடர்பில் குறிப்பாக தமிழ் மொழி மூலமான பாடத் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் இருக்கின்றன. இதில் முக்கிய சில விடயங்கள் குறித்து நான் இந்தச் சபையின் அவதானத்திற்கு பலமுறை கொண்டு வந்துள்ளேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழ் மொழி மூலமான வரலாற்றுப் பாடநூல்கள் அதனைக் கற்கின்ற மாணவர்களுக்கு தமிழர்களோ முஸ்லிம்களோ இந்நாட்டைச் சார்ந்தோர் அல்லர் அவர்கள் அந்நியமானவர்கள் என்ற கருத்தினையே போதிக்கின்றன. இது ஒரு பாரதூரமான விடயமாகும்.

இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் இலங்கையர்கள் என இந்த நாட்டில் ஏதாவது ஆபத்து ஒன்று நிகழுகின்றபோது ஒரு சிலரால் வாய் வார்த்தையாகக் கூறப்பட்டாலும் அதனை வரலாற்று ரீதியிலாக ஒப்புவிக்கக்கூடிய வரலாற்று சான்றுகள் பல இருக்கின்ற நிலையிலும் தமிழ் மொழியிலான பாடத் திட்டங்களில் அவை இல்லை.

குறிப்பாக மஹாவம்சத்திலே குறிப்பிட்டுள்ள விடயங்களைக் கூட இந்த நாட்டு கல்வித்துறை ஏற்க மறுக்கின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது.

எனவே இன மத பேதங்களை அகற்றி எல்லோரும் இந்நாட்டு மக்கள் என அனைத்து மக்களும் உணர்வு ரீதியில் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலான வழிவகைகளை கல்வித் திட்டத்தில் இருந்தே – அதுவும் ஆரம்பக் கல்வித் திட்டத்திலிருந்தே முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நடைபெற்ற பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.