(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தடை விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்து இது வரை சாட்சிகள் வெளிப்படுத்தப்படவில்லை என்று சாட்சி சுருக்கங்கள் அடங்கிய அறிக்கை ஊடாக குற்றப்புலனாய்வுப் பிரிவு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு அறிவித்தது.

 

அத்துடன் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பயங்கரவாத அடிப்படைவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணியதாக தெரிவிக்கப்பட்ட விடயமும் உண்மைக்குப் புறம்பானது என விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக சி.ஐ.டி நீதிமன்றுக்கு அறிவித்தது. 

வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊடாக நிதி பெற்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக இரு தனியார் வங்கிகளில் விரிவான அறிக்கையை பெற்றுக் கொள்ளவும் சி.ஐ.டி நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொண்டது. 

வைத்தியர் மொஹமட் ஷாபியின் விவகாரம் தொடர்பான விசாரணைகள் குருணாகல் பிரதான நீதிவான் சம்பத் காரியவசம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன் போது வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சி.ஐ.டியில் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப்பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ்.திசேராவின் கீழ் அப்பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர் இலங்க சிங்க உள்ளிட்ட குழுவினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சாட்சியங்களின் சுருக்கம் பீ அறிக்கையாக மன்றுக்கு சமர்பிக்கப்பட்டது. 

சி.ஐ.டி பொலிஸ் அத்தியட்சர் அசங்க தலைமையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா ,பொலிஸ் பரிசோதகர் இலங்க சிங்க , சாஜன் ராஜபக்ஷ , கானஸ்டபில் சில்வா ஆகிய குழுவினர் மன்றில் நேரில் ஆஜராகி இவ்வறிக்கையை சமர்பித்து விசாரணைகளை விளக்கினர். 

வைத்தியர் ஷாபி தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சி.ஐ.டியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. எனினும் அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தினின் கீழ் சட்டத்தரணி சிகாஸ் ஹிஸ்புல்லா, பிரேமரத்ன தென்னகோன் , எரங்க குணவர்தன , செனாப் மொஹமட் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜரானது. 

சட்ட விரோத கருத்தடை காரணமாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தாய்மார் சார்பில் சட்டத்தரணி டெனி பெர்னான்டோ , சானக அபேவிக்கிரம , பிரியங்க டயஸ் நிலூசி உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர். பிற்பகல் 12.15 கடந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் சி.ஐ.டி பொலிஸ் அத்தியட்சர் அசங்க , உதவி பொலிஸ் அத்தியட்சர் பி.எஸ்.திசேரா ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர். 

கடந்த மே 24 ஆம் திகதி குறித்த பொலிஸ் அத்தியட்சர் கீழான விஷேட விசாரணை குழுவால் வைத்தியர் ஷாபி கைது செய்யப்பட்ட நிலையில் மே 24 ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்த உத்தரவிற்கமைய அது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் சி.ஐ.டியால் பொறுப்பேற்க்கபட்டதாக பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி அசங்க மன்றுக்கு அறிவித்தார். இதன்படி இது வரை 500 க்கும் அதிகமான வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதனையடுத்து விசாரணை மேற்பார்வை அதிகாரி என்ற ரீதியில் உதவி பொலிஸ் அத்தியட்சர் பி.எஸ்.திசேரா விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடங்களை நீதிவானுக்கு விளக்கினார். சுமார் இரண்டரை மணித்தியாலம் விளக்கம் நீடித்தது. முதலில் கடந்த மே 23 ஆம் திகதி தேசிய பத்திரிகையில் வெளியிடப்பட்ட பிரதான தலைப்புச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு அந்த செய்தி தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் குருணாகல் பொலிஸார் வைத்தியர் ஷாபியை கைது செய்த நிலையில் அவரையும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய அவரையும் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளையும் முன்னெடுப்பதாக திசேரா சுட்டிக்காட்டினார்.