தற்போது இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் முக்கிய வரிகளில் ‘பெறுமதி சேர் வரி’  (VAT) முதலிடத்தினைப் பெறுகின்றது.  VAT என்றால் பொருட்கள் மற்றும் சேவைகளின் உள்நாட்டு நுகர்வின் மீது விதிக்கப்படும் வரியாகும். 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், இலங்கையின் சட்ட ரீதியான எல்லைகளுக்குள் வழங்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகள் என்பன இவ்வரி விடயத்திற்கு உள்ளாகின்றன. இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் ஒவ்வொரு நிலையிலும் அதிகரித்த பெறுமதியின் மீது விதிக்கப்படும் ஓர் பல்நிலை வரியாகும். இந்த வரியானது, பொருட்கள் மற்றும் சேவைகளின் இறுதி பயன்பாட்டாளரினால் பொறுப்பேற்கப்படுகின்றது. 

இது ஒரு மறைமுக வரியாகும். இறுதிப் பயன்பாட்டாளரினால் செலுத்தப்பட்ட தொகைக்கு சமமான தொகையினை அரசாங்கம், உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியிலுள்ள அனைத்து இடைநிலை வழங்குனர்களினூடாக இறுதியில் பெற்றுக் கொள்ளும்.

பெறுமதி சேர் வரி  - (VAT) ஆனது குறித்த சில இறக்குமதிகள், பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த வழங்கலின் மீது விதிக்கப்படுவதில்லை. இந்தப்பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிப்புப் பெற்ற பொருட்கள் மற்றும் சேவைகளும் உள்ளன.

பெறுமதி சேர் வரி  - (VAT)  வீதங்கள்

நியம வீதம் - 15%

பூஜ்ஜிய வீதம் - 0%

நிதிச்சேவைகள் மீதான அறவிடத்தக்கவை நீங்கலாக பெறுமதி சேர் வரிக்கான விதிப்பனவுகள்

தயாரிப்பாளர்கள்

இறக்குமதியாளர்கள்

சேவை வழங்குனர்கள்

கேள்வி உடன்படிக்கையின் கீழான பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்குனர்கள்

விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம்

பதிவு செய்தலுக்கு உரித்துடையவர்கள் யார்?

ஒருவருடைய வரி விதிக்கத்தக்க பொருட்கள் அல்லது சேவைகளின் வழங்கலானதுஇ

காலாண்டொன்றுக்கு ரூபா 3,000,000 இனை விஞ்சியுள்ள,

ஆண்டொன்றுக்கு ரூபா 12,000,000 இனை விஞ்சியுள்ள,

தொடர்ந்து வரும் காலாண்டில் அல்லது தொடர்ந்து வரும் பன்னிரெண்டு மாத காலப்பகுதியிலுள்ள ரூபா 3,000,000 அல்லது 12 மில்லியனை விஞ்சியிருப்பின்,

அத்தகைய வரி விதிக்கத்தக்க நடவடிக்கையில் ஈடுபடுகின்ற ஒவ்வொரு ஆள்.

ரூபா 12.5 மில்லியனை விஞ்சுகின்ற காலாண்டு புரள்வு/வழங்கலினை கொண்டுள்ள மொத்த அல்லது சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுகின்ற ஆளொருவர் அல்லது பங்குடமையொன்று. (விலக்களிக்கப்பட்ட அல்லது புறந்தள்ளப்பட்ட பொருட்கள் உட்பட).

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்நாட்டு மக்களின் மொத்ததேவைகளை உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைவாகவே நிறைவு செய்கின்றது. கணிசமான தேவைகளை இறக்குமதி வாயிலாகவே ஈடுசெய்யக்கூடியதாக உள்ளன. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் பெரும்பாலும் முடிவுப் பொருளாகவே (Finished Product) உள்ளன. இதற்கு உதாரணமாக உணவுப்பொருட்கள், மருந்துவகைகள், கட்டிடப்பொருட்கள் மற்றும் சாதனங்கள், வாகனங்கள், கணினி, தொலைத்தொடர்பு சாதனங்கள் (கையடக்கத் தொலைபேசி)என்பனவற்றைக் கூறலாம்.

முக்கிய விடயம் யாதெனில், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முடிவுப்பொருட்களில் எவ்வித பெறுமதியும் இலங்கையில் சேர்க்கப்படுவதில்லை. மாறாக அப்பொருட்களினை விற்பனை செய்வோர் தமக்கு தேவையான இலாபம் பெறுமானத்தினை சேர்த்து விற்பனைசெய்கின்றனர். அதாவது உண்மையான பெறுமதி சேர்க்காது தனியே இலாபம் மட்டுமே சேர்க்கப்படுகின்றது. இந்த முறையானது நம் இலங்கைநாட்டிற்கு மிகவும் பிரதிகூலமானதே.

ஆகவேதான் இலங்கையில் நடைமுறையிலுள்ள VAT என்கின்ற வரிமுறையானது ‘அதன் வரைவிலக்கணத்திற்கு உண்மையில் பொருந்துமா?’ என்கின்ற கேள்வி எழுகின்றது.ஏனெனில் உண்மையான பெறுமதிக்குப் பதிலாக உத்தேச (Artificial) இலாபப் பெறுமானத்தினைச் சேர்ப்பதால்தான், இலங்கையில் நடைமுறையிலுள்ள பெறுமதிசேர் வரியினை VAT என்று கூறாமல் நான் PAT என்று கூறுகின்றேன். இந்தப் பெயர் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என நான்கருதுகின்றேன்.