ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை எடுக்குமென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 


சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


ஐனாதிபதித் தேர்தல் என்று வருகின்ற போது அதில் போட்டியிடும் வேட்பாளர் மிக முக்கியம். அந்த வேட்பாளரின் தன்மை, அவர் சொன்ன விடயத்தைச் செய்யக் கூடியவராக இருப்பாரா? பலமானவராக இருப்பாரா? உண்மையான விசுவாசத்துடன் எங்களுடன் பேசுகின்றாரா? என்பதெல்லாம் பார்க்க வேண்டும். ஆகவே அத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படும்  வரையும் நாங்கள் யாரை ஆதரிப்போம் அல்லது என்ன நிலைப்பாட்டை எடுப்போம் என்று சொல்ல முடியாது. 


ஒரு வேட்பாளரை அறிவித்த பின்பு அவருடன் நாங்கள் நடத்தக்கூடிய பேச்சுவார்த்தைகள் அல்லது அவருடன் பேசி எடுக்கக்கூடிய முடிவுகள் தொடர்பிலும் பார்க்க வேண்டும். 

ஏனெனில் அவ்வாறாக ஒருவருடன் எழுத்து மூலத்திலேனும் ஒப்பந்தகங்களைச் செய்தாலும் அந்த ஒப்பந்தங்கனை நிறைவேற்றுவார்கள் என்று நான் நம்பவில்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் பல ஒப்பந்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

அதில் பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தங்களை நாம் பார்த்திருக்கின்றோம். அவைகள் எல்லாம் கிழித்தெறியப்பட்டமை பார்த்திருக்கிறோம். இருந்தாலும் சரி பிழை என்பதற்கப்பால் இதில் எது சரிவரும் எது சரிவராது என்பதற்கப்பால் நிச்சயமாக பெரும்பான்மைக் கட்சியொன்றுடன் அல்லது ஆட்சிக்கு வருகின்ற கட்சியொன்றுடன் பேசித் தான் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். 


ஏனென்றால் கடந்த 70 வருடமாக பேராடியும் அடைய முடியாத நிலைமை உள்ளது. இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஒரு சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே தொடர்ந்தும் நாங்கள் எங்களுடைய முயற்சியை எடுக்க வேண்டும். சர்வதேச ரீதியாக எங்களுடைய பிரச்சனைகளை எடுத்துச் சென்று அழுத்தங்களைக் கொடுப்பதற்கான முழு முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இவைகள் மூலம் தான் ஒரு நியாயமான தீர்வை அடைய முடியும். 


அதற்காக சரியான ஒருவர் என்று கருதக்கூடியவர் யார் என்பதைப் பார்த்து அவருடன் நடத்தக் கூடிய சம்பாசனைகள் அல்லது அவர் எங்களுக்குத் தருகின்ற உறுதிமொழிகள் என இவை எல்லாவற்றையும் வைத்து தான் எங்களுடைய செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்க முடியும் என்றார்.