அமெரிக்காவின் நெருக்கடியை ஏற்று, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அறிவித்துள்ளார்.

அந்த ஏவுகணைகளை வாங்கிப் பயன்படுத்துவது என்பது துருக்கியின் இறையாண்மை தொடர்பான விவகாரம் ஆகும். எனவே, அந்த இறையாண்மையைக் குலைக்கும் வகையில் அந்தத் திட்டம் கைவிடப்படாது.

திட்டமிட்டபடி ரஷ்யாவிலிருந்து எஸ்-400 ஏவுகணைகள் அடுத்த மாதம் வரத் தொடங்கும். துருக்கியின் பாதுகாப்பு தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு எந்த நாட்டின் அனுமதியும் நமக்குத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும், அந்த ஒப்பந்ததைக் கைவிட துருக்கி ஜனாதிபதி எர்டோகன் மறுத்துவிட்டார்.

அதற்குப் பதிலடியாக, துருக்கிக்கு தனது அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்களின் விற்பனை செய்வதை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இந் நிலையிலேயே துருக்கி ஜனாதிபதி மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.