போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் குற்றவாளிகளாக சிறைச்சாலையில் உள்ள நால்வருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தான் இன்று கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி  தெரிவித்தார்.

இளம் உயிர்களை அழித்து நாட்டை படுகுழிக்குள் தள்ளும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு தான் கடந்த நான்கு வருட காலமாக கடுமையாக முயற்சித்து வருவதுடன் அனைவரினதும் உதவியுடன் அப்போராட்டத்தை இறுதி வரை கொண்டு செல்வதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார். 

இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்ளின் தலைவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று நினைகூரப்படுவதை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு வார்தை பிரகடனப்படுத்தி அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது அதற்கு பின்னர் யார் அதிகாரத்திற்கு வந்தபோதிலும் நாட்டை நேசிப்பவர்கள் அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை  இரத்து செய்ய வேண்டும். 

19வது திருத்த சட்டத்தை தயாரிக்கையில் ஏற்பட்டுள்ள முறைக்கேடுகளினால் அதனை பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பதற்காக தான் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் எதிர்பார்த்த குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாது போயுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி  மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் நாட்டை வழிநடத்துகையில் பாராளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட மற்றுமொரு தலைவர் நாட்டை ஆட்சி செய்வதற்கு முயற்சிப்பதனால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை நாட்டில் மிகப் பாதகமான நிலைமையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். 

ஆகையினால் சிறந்த சுதந்திரமான ஜனநாயக ஆட்சிக்காக எதிர்காலத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் கட்டாயமாக நீக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு தலைமைத்துவம் வழங்க வேண்டியது நாட்டை நேசிக்கும் அனைவரதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். 

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் தீர்மானத்திற்கமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுதல் தொடர்பாக தான் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக தெரிவித்ததுடன் தனது 52 வருடகால அரசியல் வாழ்க்கை பல்வேறு மேடுபள்ளங்களையும் திருப்பு முனைகளையும் கொண்டிருந்தமையையும் நினைவுகூர்ந்தார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலும் தனக்கு அத்தகையதொரு அனுபவமாகவே அமையுமென தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் பொய்யான பிரச்சாரங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி தனது வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் அனைத்தும் குறித்த அரசாங்கங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ அழைப்பிற்கமையவே இடம்பெற்றதெனக் குறிப்பிட்டார்.. 

சில ஊடகங்கள் குறிப்பிடுவதைப்போன்று பெருமளவிலான பிரதிநிதிகள் தமது சுற்றுப் பயணங்களில் கலந்துகொள்ளவில்லை எனவும் பத்துக்கும் மேற்படாத குழுவினரே தமது உத்தியோகபூர்வ பயணங்களில் இணைந்துகொண்டனர் எனவும். அப்பயணங்கள் தாய் நாட்டிற்கு பெருமளவிலான நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்தார். 

அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்படவுள்ள Sofa மற்றும் Vfa ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி  அவ் ஒப்பந்தங்கள் தொடர்பில் தனக்கு எவ்வித உடன்பாடுகளும் இல்லை எனவும், அதனை பாராளுமன்றத்தில் தான் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறை தொடர்பில் இந்தியாவுடனும் ஜப்பானுடனும் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி  அவ்வுடன்படிக்கைகளின் ஊடாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமை காணப்பட்டதனால் முதலில் தான் அவற்றை எதிர்த்ததாகவும் அவ்விடயங்கள் திருத்தப்பட்டதன் பின்னர் இலங்கை பெருமளவு நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலேயே குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.