எம்மில் பலருக்கும் இன்றைய திகதியில் நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்காக மருத்துவர்கள் இரவு அல்லது மாலை நேர உணவாக கோதுமையில் தயாரான சப்பாத்தியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இந்நிலையில் சிலருக்கு கோதுமையில் தயாரான உணவு பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி செலியாக் நோயை உண்டாக்கிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

செலியாக் நோய் என்பது எம்முடைய செரிமான மண்டலத்தில் குறிப்பாக சிறுகுடலில் உள்ள சத்து உறிஞ்சும் நுண்ணிய மற்றும் ஊட்டச் சத்தை உறிஞ்சும் குழல்கள், கோதுமையில் இருக்கும் குளூட்டன் எனப்படும் புரத சத்தினை ஏற்றுக்கொள்வதில்லை அல்லது குளூட்டன் புரதத்தின் காரணமாக தங்களது பணியில் இடையூறை எதிர்கொள்கின்றன. 

இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி திருப்பித் தாக்கத் தொடங்குகிறது. அதாவது குளூட்டன் புரதம் இந்த நோயாளிகளின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயற்படுகிறது.

இத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள் போதுமான ஊட்டச்சத்தினை சாப்பிட்டாலும், அவர்களுக்கு அது உடலுக்குள் சேர்வதில்லை. இதன் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, கால்சியம் மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு, கருவுறாமை அல்லது கருச்சிதைவு, வலிப்பு போன்ற நரம்பியல் பாதிப்புகள், சிறுகுடல் புற்றுநோய் என பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

வயிற்றுப்போக்கு, சோர்வு, எடை இழப்பு, வீக்கம், குமட்டல், வாந்தி, பசியின்மை போன்றவை இந்த நோயின் பொதுவான அறிகுறிகள். சிலருக்கு தோலில் அரிப்பு, வாய்ப்புண் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து, இதற்கான பரிசோதனையை மேற்கொண்டு, செலியாக் நோய் பற்றிய ஒரு இறுதியான தீர்வை பெற வேண்டும். பிறகு இதற்கு நிவாரணமாக குளூட்டன் ஃப்ரீ டயட் எனப்படும் குளூட்டன் புரதசத்து அதிகமுள்ள உணவை முற்றிலுமாக தவிர்த்துவிடவேண்டும். நாளடைவில் இந்த பாதிப்பு சரியாகத் தொடங்கும். சிலருக்கு ஆயுள் முழுவதும் கோதுமையில் தயாரான உணவை சாப்பிட முடியாத நிலை ஏற்படலாம்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.