சென்னையில் 5 ஆம் திகதி சோனியாகாந்தி - கருணாநிதி ஒரே மேடையில் பேசுவதையொட்டி தீவுத்திடல் பொதுக்கூட்டத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் நாளை மறுநாள் (5 ஆம் திகதி) சென்னை தீவுத் திடலில் ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர்.

வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த பொதுக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். கூட்டணி கட்சியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதையொட்டி தீவுத்திடல் பொதுக்கூட்ட மேடைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மேலும் டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை பொலிஸ் அதிகாரிகள் சென்னை வந்தனர். சிறப்பு பாதுகாப்பு படை எஸ்.பி. சர்மா தலைமையில் இந்த குழுவினர் வந்துள்ளனர்.

தீவுத்திடல் மேடை பகுதியில் தீவிர சோதனை செய்து சிறப்பு படை பொலிஸார் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். பொதுக்கூட்ட மைதானம், தலைவர்கள் வரும் பாதை ஆகிய இடங்களில் தீவிர சோதனையிட்டனர்.

மேலும் பாதுகாப்பு குறித்து தமிழக பொலிஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். கூட்டத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகளை கவனிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பொதுக்கூட்டம் நடைபெறும் தீவுத்திடல் பகுதியில் தமிழக பொலிஸாரும் டெல்லி பொலிஸாரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.