(இராஜதுரை ஹஷான்)

எமது அரசாங்கத்தில் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று முஸ்லிம் உலமா கட்யியுடன்  இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே  அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அனைத்து பிரஜைகளுக்கும் பொதுவான சட்டம் காணப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் ஒற்றுமை வலுப்பெற வேண்டுமாயின் அனைவரும் பொதுச் சட்டத்திற்கு  கட்டுப்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவாக காணப்படாத பட்சத்திலே பிரச்சினைகள் தோற்றம் பெறும். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது..

எமது அரசாங்கத்தில் இனவாதம்  தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. கடந்த அரசாங்கத்தில் உள்ளூர் மட்டத்தில்    ஏற்பட்ட இனகலவரங்களை குறுகிய நேரத்தில்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வரும்  அளவிற்கு தேசிய பாதுகாப்பு பலமாக காணப்பட்டது.  

குண்டு தாக்குதல் குறித்த அனைத்து  தகவல்களும்  முழுமையாக கிடைக்கப் பெற்றும் அரசாங்கம் எவ்வித  நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இதற்கு  அரசாங்கம் முழு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இன்று அரசாங்கம் எதிர் தரப்பினர் மீது  இந்த குற்றச்சாட்டை சுமத்துகின்றது.

ஒரு சில முஸ்லிம்கள் தவறான தீர்மானங்களை கொண்டு     செயற்பட்டமையினால் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும்  குறை சொல்ல முடியாது. தற்போதைய நிலைமையினை அனைவரும் ஒன்றிணைந்தே வெற்றி கொள்ளவேண்டும் என்றார்.