கொழும்பு, தெமட்டகொடை விபுலானந்தா தமிழ்மகா வித்தியாலயத்தின் சுற்று மதிலூடாக கழிவுநீர் பாடசாலை வாகளத்துக்குள் உட்புகுவதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக பாடசாலையின் அதிபர் கே.சண்முகானந்தன் விசனம் வெளியிட்டுள்ளார்.

பாடசாலையை அண்டிய பகுதியில் காணப்படும் குடியிருப்பு தொகுதியொன்றிலிருந்தே மேற்படி கழிவுநீர் பாடசலை சுற்றுப்புற மதிலினூடாக உட்புகுவதாகவும், இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் எல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக எமது இணையத்தள செய்திப் பிரிவு குழுவினர் சம்பவ இடம்திற்கு சென்று பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கே.சண்முகானந்தன்,

கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் எமது பாடசாலை மதிலை ஒட்டிய வடிகானொன்றிலிருந்து கழிவுநீர் பாடசலை வளாகத்தினுள் உட்புகுவதனால் பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மிகவும் பாதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக 2006 ஆம் ஆண்டிலிருந்து பல இன்னல்களை நாம் எதிர்நோக்கி வருவதுடன்,  இது தொடர்பில் கல்வித் திணைக்களம் மற்றும் மாகாண சபைகள், மாநகர சபைகள் மற்றும் ஜனாதிபதி வரை இந்தப் பிரச்சினையை நாம் எடுத்துச் சென்றுள்ளோம்.

இவ்வாறு கழிவுநீர் உட்புகுவதற்கான காரணம் பாடசாலை வளாகத்தை அண்மித்து காணப்படுகின்ற பாலித பிளேஸின் 11 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 120 குடும்பங்கள் குடியிருக்கும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்கின்ற வடிகானானது சீரமைக்கப்படாமையாகும்.

கழிவுநீர் தேங்கி நிற்கும் வடிகானை ஒட்டி காணப்படுகின்ற எமது பாடசாலை மதில் சிதைவடைந்து காணப்படுகின்றமையினால் பிரதேச மக்கள் பாடசலை மதிலில் துளைகளையிட்டு பாடசாலை வாளாகத்துக்குள் கழிவுநீர் உட்புகுவதற்கு வழியை ஏற்படுத்தி விட்டுள்ளனர்.

இவ்வாறு பாடசாலை வளாகத்திற்குள் கழிவுநீர் உட்புகுவதனால் பாடசாலை சூழல் பெரும் தூர் நாற்றத்துடன் காணப்படுவதுடன் பெரும் நோய்த்தொற்றுகளுக்கும் வேறு இன்னல்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் முகங்கொடுத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த வாரம் பாடசாலை மாணவியொருவர் இதனால் பாதிக்கப்பட்டு மயக்கமுற்றதுடன், அவரை வைத்தியாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையும் வழங்கியிருந்தோம்.

அத்துடன் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுக்காத சூழ்நிலைகளும் மற்றும் சுகயீன விடுமுறையில் செல்லும் நிலைமையும் அதிகரித்து வருகிறது.

மேலும் சுகாதார அமைச்சினால் டெங்கு அச்சுறுத்தல் தொடர்பில் பல முறை சிவப்பு எச்சரிக்கை பாடசாலைக்கு விடுக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலையை அண்மித்துக் காணப்படும் 11 ஆவது ஒழுங்கையை டெங்கு அச்சுறுத்தலுக்குட்பட்டிருக்கும் பிரதேசம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதனால் தான்  11 ஆவது ஒழுங்கையில் உள்ள மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது கையொப்பங்களையும் பெற்று, இது தொடர்பில் உடனடி தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். இதற்கான ஆவணங்களை நாம் தெமட்டகொடை பொலிஸ், மாநகர சபை மற்றும் அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்டோருக்கும் சமர்ப்பித்துள்ளோம்.

அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் என்னுடன் இணைந்து இந்தப் பிரச்சினையை சகல இடங்களுக்கும் தீர்ப்பதற்காக முன்னெடுத்துச் செல்கின்றார்கள். 

இந்நிலையில் இது தொடர்பில் அண்மையில் அமைச்சர் மனோகணேசனுக்கு அறிவித்திருந்தோம், அவர் உடனடியாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பி.சுதர்சனை அனுப்பி வைத்து, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பணித்திருந்தார். 

ஆகவே இந்தப் பிரச்சினை மாணவர்களின் கல்வியில் மாத்திரமல்லாது அவர்களது வாழ்க்கையுடன் தொடர்புடைய மிக முக்கியமான விடயம் என்பதை கருத்திற்கொண்டு  உரிய தீர்வினை மிக விரைவில் பெற்றுத் தருமாறு அதிபர் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பி.சுதர்சன்,

கடந்த 17 ஆம் திகதி விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் குறித்த விடயத்தை அமைச்சர் மனோகணேசனுக்கு அறிவித்திருந்தார். அதனையடுத்து அமைச்சர் மனோகணேசன் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு மேற்படி பாடசலைக்கு விஜயம் செய்து அந்த நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு என்னிடம் பணித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபையின் சுகாதார உத்தியோகத்தர்கள், தெமட்டகொடை பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் குறித்த பாடசலைக்கு விஜயம் செய்து, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் இது தொடர்பில் ஒரு கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தோம்.

இக் கலந்துரையாடலின் பின்னர் பாடசலையின் மதில் சுவரையும், வடிகானையும் திருத்துவதற்கான தேவையை நாம் இனங்கண்டு கொண்டோம். இதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து இதற்கான அறிக்கையினை நான் அமைச்சர் மனோகணேசனிடம் கையளித்திருந்தேன். 

அதற்கமைய அன்றைய தினத்துக்கு அடுத்த நாள் அவர் என்னை அவரது அலுவலகத்துக்கு அழைத்து அந்த இரண்டு வேலைத்திட்டத்துக்குமான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வதாகவும், குறித்த பிரச்சினையை விரவைில் பூர்த்தி செய்யுமாறும் அறிவித்திருந்தார். 

இதன் பின்னர் வேலைத்திட்டத்துக்கான திட்டமிடல் ஆவணத்தை அமைச்சரிடம் பெற்றுக்கொண்டு பாடசாலை மதிலை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்ட தொகை மதிப்பீடாக 32 இலட்சம் ரூபாவை தருவதாக அறிவித்திருந்தார். குறித்த தொகை இன்னும் இரு வாரங்களில் எனது கைகளுக்கு கிடைத்து விடும். ஆனால் குறித்த கழிவுநீர் வடிகானை நிர்மாணிப்பதற்கான பணம் இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் குறித்த பிரச்சினையும் நிவர்த்திசெய்யப்படும் என்றார்.