தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லை. தண்ணீர் பற்றாக்குறை மட்டுமே இருக்கிறது என அமைச்சர் ஓ. எஸ். மணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“தேர்தலை சந்திக்காமலேயே ஆட்சி மாறும் என்று ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அவருக்கு முதல்வராகும் ஆசை வந்து விட்டது என்று பொருள். அதை அவர் கனவில் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

சபாநாயகரை மாற்ற வேண்டும் என்பதைவிட முதல்வரை மாற்றுவது முக்கியம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததே அவர்கள்தான். அப்புறம் ஏன் பின்வாங்குகிறார்கள்? இது அவர்களுக்கு வாடிக்கைதான். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்கட்சியான தி.மு.க.வை எதிர் கொள்வதில் எந்த சிக்கலுமில்லை.

மூன்று ஆண்டுகள் தி.மு.க.வினரை சட்டப்பேரவையில் எதிர்கொண்டிருக்கிறோம். எஞ்சியிருப்பது இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டும்தான். இப்போதும் எங்களுக்கு போதுமான எண்ணிக்கை இருக்கிறது.

அதனால் எந்தவிதமான சஞ்சலமும் சலனமும் கிடையாது. அதனால் தி.மு.க.வினர் எப்போதும் அ.தி.மு.க. உறுப்பினர்களிடம் வாலாட்டவே முடியாது. தமிழ் நாட்டில் குடிநீர் பற்றாக்குறை இல்லை. அதே சமயத்தில் தண்ணீர் பற்றாக்குறை மட்டுமே இருக்கிறது.

இதற்கு குடிநீர் பற்றாக்குறை என்று பெயர் வைக்கக் கூடாது. இதைத்தான் ஸ்டாலின் செய்கிறார். இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.