மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயதுடைய சிறுவன் நேற்று மாலை காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் 7வயதுடைய சிறுமியொருவர் காத்தான்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சிறுமியின் மாமா முறையான சிறுவனினாலே, இந்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சிறுவன் அந்த சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும், இந்த நிலையில் இச்சிறுமி நேற்று காலையில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகளை மேற் கொண்டுள்ள காத்தான்குடி பொலிஸார் சிறுவனை கைது செய்துள்ளதுடன் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற சொகோ பொலிஸ் பிரிவின் மாவட்ட பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். 

-ஜவ்பர்கான்